நாட்டில் கோதுமை மாவின் விலையை ஒழுங்குபடுத்த விலைசூத்திரம் தேவை! அரசாங்க நிதி பற்றிய குழு ஆலோசனை
இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கினார்.
கோதுமை மாவுக்கு விலைச்சூத்திரமொன்றைப் பேணிவந்தால் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பியவாறு விலைகளைத் தீர்மானிப்பதற்கு இடமளிக்காமல் இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நாடாளுமன்றத்தில் அண்மையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவிலேயே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை முழுவதிலும் உள்ள வணிக நிலையங்களில் வௌ;வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இருந்தபோதும் நிதி அமைச்சு வழங்கிய விலைக்கு அமைய ஒரு கிலோ கோதுமை மாவை 198 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
கோதுமை மாவின் விலையை நிர்ணயிப்பதில் இரண்டு விலைக் கணக்கீடுகள் பயன்படுத்தப்படுவதாகவும் இந்நிலை மாற்றப்பட வேண்டுமெனவும் தலைவர் வலியுறுத்தினார்.
கோதுமை மாவிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் விலை அதிகரித்துள்ள போதிலும் ஏற்கனவே இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் காணப்பட்ட கோதுமை மாவுக்கும் புதிய வரியையும் உள்ளடக்கியதாக விலை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் சமையல் எரிவாயு மற்றும் பால் மாவுக்கான விலை சூத்திரத்தை தயாரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நினைவுபடுத்திய குழுவின் தலைவர், கோதுமை மாவின் விலையைஒழுங்குபடுத்த விலைச்சூத்திரம் தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.மேலும் பன்முகத்தன்மையை சமாளிக்கும் வகையில் விலை சூத்திரம் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியது.
அத்துடன் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பொருள்களுக்கான வரிகளைக் குறைப்பதற்கும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதிய 2338- 54 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை பற்றிக் கலந்துரையாடும்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு அமைய 15 சதவீதமாக இருந்த வரி விகிதம் 5 சதவீதமாக குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.அதற்கான அனுமதியை வழங்கிய குழு இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தது.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் சாத்தியக்கூற்று ஆய்வு நடத்தப்படவில்லையெனத் தெரிவித்தனர்.
இது விடயத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய குழுவின் தலைவர், இந்த ஒப்பந்தம் குறித்த தர்க்கரீதியான விடயங்களை முன்வைத்து 6 வாரங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பொறுப்பான அதிகாரிக்குப் பணிப்புரை விடுத்தார்.
1962 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட 2336- 72ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரண்டாவது தடவையாகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும், இந்த வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டளைக்கு அனுமதி வழங்குவதில்லையெனக் குழு தீர்மானித்தது. இங்கு சவர்க்கார உற்பத்திக்குத் தேவையான
மூலப்பொருள்களை இறக்குமதி செய்வது தொடர்பான எச்எஸ் குறியீட்டை மாற்றுவதற்கான முன்மொழிவை அதிகாரிகள் முன்வைத்தனர்.
இந்த முறையின் மூலம் தொடர்புடைய மூலப்பொருள்களின் இறக்குமதி மீதான வரி விகிதங்கள் அதிகரிக்கப்படுமா எனக் குழு கேள்வி எழுப்பியது. இதற்கமைய அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் வரியைக் குறைக்குமாறும், மற்றொரு பிரிவினர் வரியைக் கூட்டுமாறும் குழுவின் அனுமதியைக் கோருவது சிக்கலுக்குரியது என்றும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
2021ஆம் ஆண்டுக்காக சவர்க்கார உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளை இறக்குமதி செய்யும்போது வரி குறைக்கப்பட்டாலும் அக்காலப்பகுதியில் எந்தவொரு இறக்குமதியும் மேற்கொள்ளப்படவில்லையெனக் குழு முன்னிலையில் தெரியவந்தது.
இதற்கு அமைய நிதி அமைச்சின் செயலாளர் தலைமையில் கூடி வரி தொடர்பில் குறிப்பிட்ட ஒரு கொள்கையைத் தயாரித்து அதனைக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.அதேநேரம் 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான வரித் திருத்தங்கள் குறித்த இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் குழு அனுமதி வழங்கியது.
அத்துடன் கசினோ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பான செயற்பாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு மற்றும் இலங்கையில் தற்போதுள்ள சில நிறுவனங்களுடன் கலந்துரையாடி ஒரு சட்டமூலமொன்றைத் தயாரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இறுதிச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு முன்னர் வரைவை அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதிக்கு அனுப்பிவைக்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதன்படி கசினோ ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பில் சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மற்றும் இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் முறைமை ஆகியவற்றை ஒப்பீடு செய்து அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு வழங்குமாறும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த காலப்பகுதியில் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் முதலீடு செய்யப்பட்ட தொகை அவற்றினால் கிடைக்கப்பட்ட நன்மைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் குழு, இலங்கை முதலீட்டுச் சபைக்குப் பணிப்புரைவிடுத்தது.
ஏனைய விடயங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியபோது வெளிநாடுகளிலிருந்து பாக்கு இறக்குமதி செய்யப்பட்டு இங்கு பெறுமதி சேர்க்கப்பட்டு மறு ஏற்றுமதி செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா இலங்கை முதலீட்டுச் சபையிடம் வினவினார்.
இவ்விடயம் இராஜதந்திர ரீதியான பிரச்சினை வரையில் செல்வதற்கான ஆபத்து இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருக்கு அறிவிக்குமாறு இலங்கை முதலீட்டுச் சபையிடம் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
கருத்துக்களேதுமில்லை