சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டதால் நம்பிக்கை இழந்தோம்! ரிஷாத் எம்.பி. சுட்டிக்காட்டு

சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால், சிறுபான்மை சமூகங்களின் நம்பிக்கைகள் சீர்குலைந்துள்ளன என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குடியியல் நடவடிக்கைகள் சட்டக்கோவை திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் –

அரசமைப்புக்கு அடுத்தபடியாக பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தையே பாதுகாப்புக்காக மக்கள் நம்பியுள்ளனர். குறிப்பாக, சிறுபான்மையினருக்கு நம்பிக்கையாக இத்திணைக்களங்களே உள்ளன. ஆனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இத்திணைக்களங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்தன. என்னுடைய கைதில் இதை நான் உணர்ந்தேன். நட்ட நடுநிசியில் ஒரு பயங்கரவாதியைப் போல் என்னைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். எந்த விசாரணையும் இல்லாமல் சிறையென்றும் சி.ஐ.டி. என்றும் என்னை அலைக்கழித்தனர்.

கைதானவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றவியல் கோவைகள் சகலதும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. விசாரணைகளை தாமதப்படுத்தி, சிறையில் வைக்கும் நோக்குடன்தான் சட்டமா அதிபர் திணைக்களம் செயற்பட்டது. அரசியல் அழுத்தத்தின் நிகழ்ச்சிநிரல் இதற்குப் பின்னால் இருந்தது.

கைதாகி விடுதலையான எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை மீண்டும் கைது செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்கள் பலர் வற்புறுத்தினர். இரு மொளலவிகளைக் கைது செய்து, பொய் சாட்சியம் சொல்லாவிடின் கொலை செய்து விடுவோம் என்றும் சி.ஐ.டி யினர் அச்சுறுத்தியுள்ளனர். பாடசாலை நிகழ்வுக்கு பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுடன் பயங்கரவாதி சஹ்ரானும் வந்ததாக பொய் சாட்சியம் கூறும்படியே இம்மௌலவிமார் அச்சுறுத்தப்பட்டனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மஹர சிறைச்சாலைக்கு அருகிலிருந்த பள்ளிவாசலை மூடியுள்ளனர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில், 1903 இல் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இப்பள்ளிவாசலை மீளவும் திறக்குமாறு கோருகிறேன்.

அல்ஆலிம் பட்டம் பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய கிதாபுகள், புத்தகங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.

வைத்தியர்களான ரிஷ்வி ஷெரீப், ஷாபி ஷிஹாப்தீன் ஆகியோரைக் கேவலப்படுத்த உச்சளவில் முயற்சித்தது சி.ஐ.டி. இதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் உடந்தையாக கருமமாற்றியது.

தற்போதைய ஜனாதிபதியான ரணில், பிரதமராக இருந்தபோது அவருக்காக சிறப்புடன் வாதாடியவர்தான் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா. ஒரு வரிக் கவிதை எழுதியதற்காக அஹ்னாப் ஜெஸீம் உள்ளிட்ட முஸ்லிம் கவிஞர்களை சிறையிலடைத்தனர். இவை அனைத்துக்குப் பின்னாலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய செயற்பட்டார். சஹ்ரான் என்ற ஒருவனுக்காக முழு முஸ்லிம்களையும் பழிவாங்கும் மனநிலையில் அன்றைய அரச நிர்வாகம் இருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டை விட்டு ஓடுமளவுக்கு நீதித்துறையில் அழுத்தங்கள் நுழைந்துள்ளன. எமது நாட்டை இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றதும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் நிர்வாகம்தான். – என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.