மக்கள் எதிர்பார்க்கும் தலைவரையே பொதுஜன பெரமுன முன்னிறுத்துமாம்! மஹிந்த திட்டவட்ட அறிவிப்பு
மக்கள் எதிர்பார்க்கும் தலைவருக்கு தமது அணி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மயூராபதி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதில் வழங்கிய அவர் –
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்துக்குத் தெரிவு செய்யப்படுவார்.
எமது அணியில் இளைஞர் அணியினர் பலரும் உள்ளனர். எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆதரவை வழங்கி முன் கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம்.
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வகையிலான சிரேஷ்ட பிரஜை ஒருவருக்கு கட்சி தலைமைத்துவத்தை வழங்க எதிர்பார்க்கிறது.
மக்கள் ஏற்று கொள்ளும் உறுப்பினருக்கு தலைமைத்துவம் வழங்கப்படும். மக்களே எனக்கும் தலைமைத்துவத்தை வழங்கினார்கள் எதிர்காலத்திலும் அவ்வாறே இடம்பெறும் எனத் தெரிவித்தார்.
நீண்ட காலமாகப் பொதுவிடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது நாட்டின் பல்வேறு வணக்கஸ்தலங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை