புத்திஜீவிகள் வெளியேற்றம் எதிர்கால சந்ததிக்கு மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்! எச்சரிக்கிறார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
புத்திஜீவிகளின் வெளியேற்றம் நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாடாக நாம் இந்த விடயத்தை உடனடியாகவும் பொறுப்புடனும் கையாளத் தவறினால், அது எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை இருளடிக்கும் அபாயம் இருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் –
இன்று நம் நாடு எதிர்கொள்ளும் புத்திஜீவிகள் வெளியேறும் சவாலின் தீவிரத்தன்மையை இதற்கு பொறுப்பான அனைவரும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தின் அபாயம் மேலோட்டமாகத் தெரியவில்லையென்றாலும், ஒரு நாடாக நாம் இவ்விடயத்தை உடனடியாகவும் பொறுப்புடனும் கையாளத் தவறினால், அது எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை இருளடிக்கும் பெரும் சோகமாக மாறக்கூடும்.
நமது நாட்டின் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு துறைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளதையும், இலவச சுகாதாரம், நமது எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் தொடர்பான கல்வித் துறைகள் போன்ற மனித வாழ்வுடன் தொடர்புடைய அத்தியாவசிய துறைகள் நாங்கள் கற்பனை செய்ய முடியாத துரதிர்ஷ்டவசமான நிலைக்கு வந்திருப்பது ஆபத்தின் விளிம்பில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில் நாடுபூராகவும் மக்கள் வாழ்வதற்காக முன்னெடுக்கும் போராட்டங்களை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.
இந்தப் பின்னணியில், வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், நம் நாட்டில் உள்ள திறமையான புத்திசாலிகள், திறமையான இளைஞர்கள் பாரியளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமையை நாம் அனைவரும் அறிவோம். இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை இதனை உறுதிப்படுத்துகிறது. 2022 இல் 311,056 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ளனர். இது 2021 இல் வெளியேறிய 122,264 பேருடன் ஒப்பிடும்போது 154.4 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
மேலும், அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஊழல் மோசடி முதலாளித்துவம் மற்றும் சாமானிய மக்களின் துயரங்களைப் பற்றிய உணர்வின்மை போன்ற காரணங்களால் இந்த நாட்டில் தொடர்ந்தும் வாழ முடியாத நிலையிலேயே பத்திஜீகளின் வெளியேற்றம் இடம்பெற்று வருகிறது.
2023 இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 750 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி நிலை, எமது நாட்டின் உயர்கல்வி மற்றும் எமது எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. அதனால் நாங்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வுகாண, இது தொடர்பில் தொழிற்சங்கள் முன்வைத்திருக்கும் பிரேரணைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை