அரசியல் வங்குரோத்து நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – சரித ஹேரத்

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தை மறுசீரமைத்து நாட்டில் அரசியல் வங்குரோத்து நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

தேர்தலை பிற்போட்டால் எதிர்மறையான தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தேர்தல் மற்றும் ஜனநாயக மரபுரிமைகளை பாதுகாப்பது பெரும் போராட்டமாக உள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அச்சமடைந்து செய்த சட்ட திருத்தத்தினால் மாகாண சபைத் தேர்தல் பல ஆண்டுகாலமாக காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளினால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டது.அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு வலுபெற்றுள்ள நிலையில் எதிர்வரும் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளில் முயற்சிக்கிறது.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை திருத்தியமைக்கும் வகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நிச்சயம் நடத்த வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை முடக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்,நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தை மறுசீரமைத்து நாட்டில் அரசியல் வங்குரோத்து நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.தேர்தலை பிற்போட்டால் எதிர்மறையான தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.