அமெரிக்க துணைச் செயலர் – சுமந்திரன் எம்.பி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்கால போக்கு சம்பந்தமாக தாம் கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலர், அஃப்ரீன் அக்தருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (12)  தாஜ்சமுத்திரா ஹோட்லில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது.

இச்சந்திப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி தெரிவிக்கையில்,

அமெரிக்காவுக்கான விஜயத்தின்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணைச் செயலர், அஃப்ரீன் அக்தருடன் சந்திப்பை நடத்தி முக்கிய உரையாடல்களை மேற்கொண்டிருந்தேன். அதன் நீட்சியாகவே தற்போதைய சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

விசேடமாக, சமகாலத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடைபெறுகின்ற நில ஆக்கிரமிப்பு சம்பந்தமான விடயங்கள் பற்றி அவர் வினாக்களைத் தொடுத்திருந்தார். அச்சமயத்தல் ஆக்கிரப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது பற்றி வெளிப்படுத்தியதோடு அவை தொடர்பான விபரங்களையும் வெளிப்படுத்தியிருந்தேன்.

மேலும், ஆக்கிரப்புச் செயற்பாடுகள் பல்வேறு விதமான வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றமையையும் நாம் எடுத்துக் கூறியிருந்தேன். இதனைவிடவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எவ்விதமான முன்னேற்றங்களுமற்றதொரு சூழல் காணப்படுகின்றமையையும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைக்காலப் போக்குகள் தொடர்பில் அவர் விசேட கரிசனையைக் கொண்டிருந்தார். குறிப்பாக, சர்வதேச விசாரணை நிராகரிப்பு, அதிகாரப்பகிர்வு விடயத்தில் காலம் கடத்தும் செயற்பாடுகள், ஜனநாயக முறைமைக்கு எதிராக தேர்தல்கள் நடத்தப்படாமை இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முன்னேற்றகரமில்லாத நிலைமைகள் தொடர்பிலும் அவரிடத்தில் எடுத்துரைக்கப்பட்டது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.