ஊடகங்களில் வெளியாகும் எதிர்மறையான செய்தி: விசாரணைசெய்யும் அதிகாரம் சபாநாயகருக்குண்டு! பிரதமர் தினேஷ் சுட்டிக்காட்டு
சபா பீடத்திலிருந்து சபாநாயகர் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அதனை சரி செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
போதைப் பொருளோடு சம்பந்தப்பட்ட ஒருவரை பாதுகாப்பதற்காகவே அரசமைப்பு பேரவை செயற்பட்டுள்ளது என்றும், அதனாலேயே பொலிஸ்மா அதிபரின் பதவி நீடிப்பை அனுமதிக்கவில்லை என்றும் செய்தி வெளியிட்ட அரச பத்திரிகைகளின் ஆசிரியர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
அரச பத்திரிகைகள் இரண்டில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை பாதுகாப்பதற்காகவே அரசமைப்பு பேரவை செயற்பட்டுள்ளது என்றும், இதனாலேயே பொலிஸ்மா அதிபரின் பதவி நீடிப்பை அனுமதிக்கவில்லை என்றும் நேரடியாக தலைப்பு செய்திகள் ஊடாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இந்த பேரவையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் உள்ளனர். இது தொடர்பில் முழு சபையின் சிறப்புரிமைகளும் மீறப்பட்டுள்ளன. இது பொய்யா? உண்மையா? என்று கூற வேண்டும் என்பதுடன், அந்த பத்திரிகைகளின் ஆசிரியர்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும். – என்றார்.
இதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில் –
சபா பீடத்திலிருந்து சபாநாயகர் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பில் எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அதனை சரி செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.
ஊடகங்களில் பல்வேறு விடயங்கள் வெளியாகின்றன. சபைக்கு சபாநாயகரே தலைமை வகிக்கின்றார். இதன்படி அவர் தீர்மானங்களை எடுக்கலாம். அது தொடர்பில் அந்த பத்திரிகைகளை அழைத்து அதனை திருத்தம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் ஒரு முகாமைத்துவத்துக்காக இடமளிக்கும் சட்டம் ஒன்றுக்கும் இடமளித்துள்ளோம் . இந்தக் கேள்வியை எழுப்பியமைக்காக உதய கம்மம்பில எம்.பிக்கு நன்றி தெரிவிக்கிறேன். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை