நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் பொறியியலாளர்களின் வகிபாகம் இன்றியமையாதது என்கிறார் பிரதமர் தினேஸ்!
இலங்கை பொறியியலாளர்கள் அமைப்பால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் ‘டெக்னோ – 2023 கண்காட்சி’ பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தொழில்நுட்ப பதில் அமைச்சர் கனக ஹேரத் ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
பல்துறைசார் நிபுணர்கள், வணிகங்களின் தலைவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் நோக்கில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் நாட்டில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வான ‘டெக்னோ கண்காட்சி’ இவ்வாண்டு 35 ஆவது தடவையாக நடைபெறுகிறது.
அதன்படி, இம்முறை ‘பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பொறியியல்’ எனும் மகுடத்தில் வியாழக்கிழமை ஆரம்பமான ‘டெக்னோ 2023 கண்காட்சி’ ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.
அந்த வகையில், ‘டெக்னோ – 2023’ கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன –
டிஜிற்றல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழுமையாக கவனம் செலுத்திவரும் இவ்வேளையில் ‘பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொறியியல்’ எனும் மகுடத்தில் இக்கண்காட்சி நடைபெறுவது மிகவும் பொருத்தமானதாக காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
வணிக வாய்ப்புக்களை உருவாக்குதல், புதிய வேலைவாய்ப்புக்களை தோற்றுவித்தல் போன்றன சமகாலத்தில் மிகவும் சவாலான விடயங்களாகக் காணப்படும் நிலையில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதுடன் மாத்திரமன்றி, அதன் இயலுமைகளை சகல தரப்பினருக்கும் காண்பிக்கவேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
கடந்த வருடம் பணவீக்க உயர்வு, பொருள்களின் விலையேற்றம், அத்தியாவசிய பொருள்களுக்கான தட்டுப்பாடு, கையிருப்பு வீழ்ச்சி உள்ளடங்கலாக இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. இருப்பினும், தற்போது நாம் அதிலிருந்து ஓரளவுக்கு மீட்சியடைந்திருப்பதுடன், எமது ஏனைய நட்புநாடுகள் மற்றும் பொதுக் கட்டமைப்புக்களின் உதவியுடன் நாட்டில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் செயற்திறனையும், பொருளாதாரத்தையும் எம்மால் மீட்டெடுக்க முடியும் என நம்புகின்றோம். இவை அனைத்திலும் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதவையாகும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அதேவேளை நிகழ்வில் வரவேற்புரையாற்றிய இலங்கை பொறியியலாளர்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் திஸாநாயக்க, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நாட்டை மீளக்கட்டியெழுப்புதல் மற்றும் நாட்டின் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட வகையில் ‘பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான பொறியியல்’ எனும் மகுடத்தைத் தெரிவுசெய்ததாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், கண்காட்சியை பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் உள்ளடங்கலாக பெருமளவான பொதுமக்கள் வருகைதந்து பார்வையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை