உலக வரைபடத்திலிருந்து பலஸ்தீனத்தை   நீக்கவே இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு! ராஜித தெரிவிப்பு

புட்டினுக்கு எதிராக யுத்தம் செய்ய அஞ்சிய அமெரிக்கா ஹமாஸுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவது பலஸ்தீனத்தை முழுமையாக உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் நோக்கத்திலேயே ஆகும் என ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு மேலும் தெரிவிக்கையில் –

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் முழு பலஸ்தீனத்தையும் உலக வரைபடத்தில் இருந்து நீக்குவதற்கு முயற்சிக்கின்றனர். மேற்குலக நாடுகள் ஹமாஸைத் தோற்கடிப்பது போன்ற விடயங்களையே கதைக்கின்றனர்.

ஆனால் அங்கே பலஸ்தீனர்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்துவதில்லை. இஸ்ரேல் – அமெரிக்க இராணுவத்தின் வெற்றிகள் தொடர்பிலேயே கதைக்கின்றனர். அன்று புட்டினுக்கு எதிராக யுத்தம் செய்ய பயந்தவர்கள் இப்போது ஹமாஸுக்கு எதிராக யுத்தம் செய்வதற்காக இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா வருகின்றது.

பிக்குகள் உள்ளிட்ட குழுக்கள் ஐ.நாவுக்கு சென்று இஸ்ரேலுக்காகக் கதைக்கின்றனர். இவர்கள் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு பிரபாகரனுக்காகவும் கதைத்து அவருக்கும் 1947இல் வழங்கியதை போன்று நாட்டில் ஒருபகுதியை வழங்கியிருந்தால் இப்படிதான் இலங்கைக்கும் நடந்திருக்கும்.

நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலஸ்தீனத்திற்கு சென்றிருந்தோம். அங்கே இஸ்ரேல் படையினரே இருக்கின்றனர். அங்கு கடும் நெருக்கடிக்குள்ளேயே மக்கள் இருந்தனர். அவர்களுக்கு விடுதலை வேண்டும். அவர்களுக்கு சுதந்திரத்தை வழங்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.