மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா ஆரம்பம்! அனுமதி மறுக்கப்பட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள்
மன்னாரில் ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்துகொள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்துக்கான தேசிய மீலாதுன் நபி விழாவை இம்முறை மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி தேசிய பாடசாலையில் நடத்துவதற்கான ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் முழு ஏற்பாடும் செய்யப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மற்றும் முசலியில் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. எனினும், காதர் மஸ்தான் தேசிய மீலாதுன் நபி விழா ஏற்பாடுகள் குறித்து மன்னார் மாவட்டத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்காமல் கொழும்பில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் ஏற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமான தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்துகொள்ளச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், மாவட்ட செயலக ஊடக அலுவலருக்கும் அனுமதி வழங்கப்படாமல், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஒரு மதத்தை பிரதிபலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிராந்திய ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமை மற்றும் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, காதர் மஸ்தானின் கட்சி சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அரசியல் நிகழ்வு போன்று தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்த்தப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை