மட்டு. வவுணதீவில் கடந்த வாரம் 10 வீடுகள் யானைகளால் சேதம்! இரா.துரைரட்ணம் தகவல்

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் யானைகளின் தாக்குதலால் 10 வீடுகள் உடைத்துள்ளதுடன் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் தினந்தினம் யானைகளின் மீதுள்ள அச்சத்தால், மக்கள் குடிமனைகளில் இருந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

குறித்த பிரதேச செயலகத்தின் கீழ் 75 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில்  24 கிராமசேவகர் பிரிவுகளையும் 138 கிராமங்களை கொண்ட 10,817 குடும்பங்களைச் சேர்ந்த 33,357 சனத்தொகையையும், 23,679 வாக்காளர்களையும் உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் விவசாயம் மற்றும் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையை வாழ்வாதாரமாக பெரும்பான்மையான மக்கள் செய்துவருகின்றனர்.

2007ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்தபோது காட்டு யானைகள் எல்லைக் கிராமங்களான கெவிளியாமடு தொடக்கம் கற்பானை வரையுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகளிலும் காணிகளிலும் உள்ள மர வகைகளான தென்னை, பனை, மா, பலா,வாழை, பப்பாசி, முந்திரிகை முதலிய மர வகைகளையும்  நெல், அரிசி, சோளம்,கௌப்பி,இறுங்கு, எள்ளு முதலிய தானிய வகைகளையும் ஏனைய பயிர்களையும் உணவாக உட்கொண்டு சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த 400 இற்கு மேற்பட்ட தற்காலிக வாடிகள், கொட்டில்களையும்  அழித்தன.

இந்நிலையில், கடந்த 19, 20, 21ஆம் திகதிகளில் ஆயித்தியமலை, நெல்லூரிலும் 6 ஆம் கட்டை நெடியமடுவிலும் 8 ஆம் கட்டை உன்னிச்சை, பாவற்கொடிச்சேனை போன்ற பிரதேசங்களில் குடிமனைகளுக்குள் காட்டு யானைகள் உள்நுழைந்து 8 பெரிய நிரந்தர வீடுகளையும் இரண்டு தற்காலிக வீடுகள் உட்பட 10 வீடுகளை உடைத்ததையடுத்து நித்திரையில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக மயிரிழையில் உயிர் தப்பினர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இப்பகுதி குடிமனைகளுக்குள் காட்டுயானைகள் உட்புகுந்து வீடுகள் மற்றும் தென்னை பயர்ச்செய்கைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் விவசாயச் செய்கையை கைவிட்டு வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துகொண்டே உள்ளனர்.

யானை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நஸ்டஈடாக வழங்கினாலும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும், பாதிக்கப்பட்ட விவசாயத்துக்கும் ஒரு வருடத்துக்கு மேலாகியும் நஸ்டஈடு வழங்கப்படவில்லை. அதேவேளை பலர் பாதிக்கப்பட்ட வீடுகளை திருத்த முடியாமல், வீடும் இல்லாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சும் ஏனோதானோ என்று இருப்பதை கைவிட்டு, ஒரு சரியான திட்டத்தை தயாரித்து செயல் வடிவத்தில் இறங்க வேண்டும்; இந்த பிரதேச மக்களை யானைகளிடமிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.