அரசாங்கங்கள் மாறும்போது தேசியத் திட்டங்களில் மாற்றம் வருவது நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறு! பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு
தேசிய பௌதீகத் திட்டத்தை உடனடியாக ஒவ்வொரு மாவட்டக் குழுவிற்கும் சமர்ப்பித்து அனுமதி பெறுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்கள அதிகாரிகளுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களில், அதற்கான நிறுவனங்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுவதால், அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்துவதில் அடிக்கடி தாமதம் ஏற்படுகிறது. காலத்துக்குக் காலம் அரசாங்கங்கள் மாறும் போது தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேசிய பௌதீக திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்கள் மிகவும் வினைத்திறனுள்ளதாகவும் மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் ‘தேசிய பௌதீக திட்டம் – 2048’ தயாரிக்கப்பட்டுள்ளது. அது 2000ஃ49 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர மற்றும் கிராம திட்டமிடல் கட்டளையின் படி உள்ளது.
தேசிய பௌதீக திட்டம் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலும் கிடைத்தது. இந்த தேசிய பௌதீக திட்டத்திற்கு அனைத்து மாவட்ட குழுக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி அங்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், இந்தத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட உள்ளது. பின்னர் அது வர்த்தமானியில் வெளியிடப்படும். தேசிய பௌதீக திட்டம் நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இந்தக் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
முதலாவதாக, 2007 இல் தேசிய பௌதீக திட்டம் தயாரிக்கப்பட்டது. பின்னர் அது 2019 இல் புதுப்பிக்கப்பட்டது. ‘தேசிய பௌதீக திட்டம் – 2048’ பல்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிஞர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எடுத்துக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கு ‘ஒரு திட்டமிடப்பட்ட நிலையான வளமான நிலம்’ என்பதாகும். இந்த தேசிய பௌதீக திட்டம், அமைச்சின் செயலாளர்கள் குழுவிற்குள் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.
நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய பௌதீக திட்டத்தின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி தனித்துவமான பங்களிப்பை வழங்கும் நகர அபிவிருத்தி, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், புகையிரத, போக்குவரத்து போன்ற அனைத்து அபிவிருத்தி செயன்முறைகளையும் முன்னெடுப்பதன் மூலம் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை பெருமளவில் தவிர்க்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாட்டின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளை இனங்கண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இந்த தேசிய பௌதீக திட்டம் மிகவும் முக்கியமானது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த, தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை