காஸா மக்கள் முகங்கொடுத்துவரும் துயரங்கள் தொடர்பில் மததலைவர்களிடம் பலஸ்தீன தூதர் கண்ணீர் மல்க விவரிப்பு!
பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்றுகூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், காஸா மக்கள் முகங்கொடுத்துவரும் துயரங்கள் குறித்து அவர்களிடம் கண்ணீர்மல்க எடுத்துரைத்தார்.
ஹமாஸ் அமைப்பால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில வாரங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவரும் நிலையில், அந்நாடுகளில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி அந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் கடந்த சில தினங்களாக பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டையும், அவர்களுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தி இலங்கையிலும் கவனவீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அரசியல் தலைவர்கள் பலரும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் திங்கட்கிழமை சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்களும், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட்டை கூட்டாகச் சந்தித்து, பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படு;த்தியிருந்தனர்.
பலஸ்தீன தூதுவருடன் திங்கள் பி.ப 2.00 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு ஆயர் ரொட்ரிகோ இத்தமல்கொட, மிலாகிரிய சென் போல்ஸ் ஆலய அருட்தந்தை ஆன்ட்ரூ, மருதானை சி.எஸ்.ஆர் நடுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் மற்றும் அருட்சகோதரி ரசிகா உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும், மௌலவி பிருதௌஸ் உள்ளிட்ட இஸ்லாமிய மற்றும் பௌத்த மதகுருமாரும், லக்ஷ்மன் குணசேகர, ஹனா இப்ராஹிம், ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், மரிஸா டி சில்வா உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இச்சந்திப்பின்போது பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லா செயிட் மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் கண்ணீர்மல்க காஸாவின் தற்போதைய நிலைவரம் குறித்து விவரித்தார். இஸ்ரேலுக்கு உதவுவதற்கு முன்வந்த பலஸ்தீனம் தற்போது முற்றாக அழிக்கப்பட்டுவருவதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலஸ்தீன மக்கள் உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று தற்போது இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துவரும் நிலையில், அதனைச் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தூதுவர், மிகமோசமான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைப் பிரஜைகளின் உயிரை அச்சுறுத்தலில் தள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் தற்போது மேற்குலக நாடுகள் செயற்படும் விதம் குறித்து விளக்கமளித்த அவர், மிகவும் தனித்துவம் வாய்ந்த பலஸ்தீன சமூகத்தின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்தும் இப்போது அழிக்கப்பட்டுவருவதாகவும், இது ‘இனப்படுகொலை’ எனவும் சுட்டிக்காட்டினார்.
அவற்றை செவிமடுத்த மதத்தலைவர்கள், இஸ்ரேலின் செயற்பாட்டைக் கண்டித்ததுடன் மூன்று தசாப்தகால சிவில் யுத்தத்துக்கு முகங்கொடுத்த நாடு என்ற ரீதியில் அதன் தாக்கங்களை தாம் நன்கறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்
கருத்துக்களேதுமில்லை