பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சட்டத்தரணிகள் சங்கம் சந்திப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் என்பன பற்றியும், அச்சட்டமூலங்கள் தொடர்பில் தமது சங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குக்கு விளக்கமளித்துள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்  கொழும்பிலுள்ள சட்டத்தரணிகள் சங்க கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் உள்ளடங்கலாக நாட்டின் சமகாலப் போக்கு தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக அண்மையகாலங்களில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன, அச்சட்டமூலங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பது பற்றியும் விளக்கமளித்தார்.

விசேடமாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் என்பன பற்றியும், நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் தொடர்பில் தமது சங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் கௌஷல்ய நவரத்ன உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தார்.

அதேவேளை இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (டுவிட்டர் பக்கத்தில்) பதிவொன்றைச் செய்திருக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதிலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொண்டிருக்கும் மிகமுக்கிய வகிபாகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.