ஐக்கிய தேசிய கட்சியை நிர்வகிப்பதை போன்று வெளியுறவுக் கொள்கையைக் கையாளமுடியாது! சஜித் போட்டுத் தாக்கு
தற்போதைய அரசாங்கத்தின் இராஜதந்திர முன்னெடுப்புகள் பலவீனமானவை என்றும், ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை பிரதிநிதிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து,ஒவ்வொரு நாட்டுக்கும் பொருந்தாத கதைகளையும் பொய்களையும் கூறுவதால் பெரும்பாலான நாடுகள் எம்மீது கோபமடைந்துள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள ஒருவரையொருவர் பொய் சொல்வதால் கட்சி பூஜ்ஜிய நிலைக்கு படுதோல்வியடைந்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சியை நிர்வகிக்கும் விதத்தில் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்க முடியாது என்றும், உலகம் பூராகவும் சென்று ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களை உலகிற்கு எடுத்துரைப்பதன் மூலம் வெற்றிகரமான வெளிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் திட்டத்தின் கீழ், 39 ஆவது கட்டமாக அத்தனகல்ல உந்துகொட அறபா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சீனக் கப்பல் தொடர்பில் கூட தற்போதைய அரசாங்கம் பல்வேறு கதைகளைக் கூறியுள்ளதாகவும், இந்தியாவிடம் வர விட மாட்டோம் என கூறி மறுபக்கம் சீனாவிடம் வாருங்கள் எனக் கூறியுள்ளனர் என்றும், நொடிக்கு நொடி மாறி மாறி கதைப்பதால் நாட்டுக்கு முக்கியமான பல சர்வதேச நாடுகள் நம் மீது கோபம் கொண்டுள்ளன என்றும், இவ்வாறான அரசாங்கத்தையோ அல்லது வெளிநாட்டுக் கொள்கையையோ நடைமுறைப்படுத்த முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொய் சொன்னது போல் சர்வதேச சமூகத்திடம் பொய் சொல்ல முடியாது என்றும், சீன கப்பல் விவகாரத்தை முழுவதுமாக குழப்பியதற்காக பல நாடுகள் நம் மீது கோபத்தில் உள்ளன என்றும், ஐக்கிய தேசியக் கட்சியால் முடியாது போனாலும், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிகரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ளது என்றும், கோள் சொல்லித் திரியும் அரசியல் மூலம் இந்த வெளியுறவுக் கொள்கையைத் திறம்பட நடைமுறைப்படுத்த முடியாது என்றும், எமது நாட்டில் ஆட்சியிலுள்ள பலவீனமான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக எமது நாட்டு மக்கள் மீதும், நாட்டு மக்கள் மீதும் கோபம் கொள்ள வேண்டாம் என சர்வதேசத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டை அழித்து,நாட்டையே வங்குரோத்தாக்கியது போலவே தமது பாதுகாப்புக்காக ஜனாதிபதியொருவரை நியமித்த அரச குடும்பத்தின் அரச குமாரர் ஒருவர் ஜனாதிபதி மீது கோபத்தில் உள்ளார் என்றும், சுகாதார அமைச்சரின் மாற்றத்தால் இவ்வாறு வருத்தம் அடைந்துள்ளனர் என்றும், இவ்வாறு கோபப்படும் அரச குடும்பம், சுகாதார அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பின் போது கூட, நாடு குறித்து சிந்திக்காமல் தம்மைப் பற்றி சிந்தித்தே செயற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றார்கள் என்பது முழு நாட்டுக்கும் தெரியும் என்றும்,இவர்கள் இப்போது முதலைக் கண்ணீர் வடித்து,வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும்,முடியுமானால் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துக் காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சவால் விடுத்தார்.
உண்மையைப் பேச தாம் பயப்படாதால், எமது நாட்டில் கல்வி ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஏனையவர்களைப் போன்று பயப்படவில்லை என்றும், வங்குரோத்து நாட்டில் இந்தத் தருணத்தில் இருந்தேனும் உலகை வெல்லும் பிரஜைகளை உருவாக்கும் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் நாடு குறித்து ஒவ்வொரு கணமும் தாம் பேசும் பேச்சுக்களை பின்பற்றி, தனது ஸ்மார்ட் கட்சியாலையே ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி கூறுவது பாசாங்குத்தனமான செயலாகும் என்றும்,ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்ப,ஸ்மார்ட் ரீதியான கல்வி முறை, ஸ்மார்ட் மாணவர்கள், ஸ்மார்ட் இளைஞர்கள் மற்றும் ஸ்மார்ட் குடிமக்கள் இருக்க வேண்டும் என்றும், நாடு ஸ்மார்ட் ஆக வேண்டுமானால், மூலோபாய ரீதியில் மாற்றம் நிகழ வேண்டுமானால், 10126 அரச பாடசாலைகளும் ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற வேண்டும் என்றும், அரசாங்கத்தால் முடியாத அந்தப் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 லட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 39 அரச பாடசாலைகளுக்கு 353 லட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை