கைத்தொழில்துறை முன்னேறவில்லை! அமைச்சர் ரமேஸ் பத்திரன வேதனை
கைத்தொழிற்துறை அபிவிருத்திக்கான தேசியக் கொள்கையொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானமாக 13.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு 2022 ஆம் ஆண்டில் எமக்குக் கிடைத்தது.
இலங்கையில் கைத்தொழில்துறைக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதன்காரணமாக எமது நாட்டு கைத்தொழில்துறை போதியளவு முன்னேற்றம் அடையவில்லை. இதனை அதிகரிக்க தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
நாட்டின் மொத்த நிலப் பரப்பில் ஒரு வீதத்தையேனும் கைத்தொழில்துறைக்கு ஒதுக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும்.
நாம் ஏற்கனவே 03 புதிய கைத்தொழில் பேட்டைகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
களுத்துறை மாவட்டத்தின் மில்லெனிய, காலி மாவட்டத்தின் எல்பிடிய, கண்டி மாவட்டத்தின் பொத்தபிடிய ஆகிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பித்துள்ளோம்.
இலங்கையின் கைத்தொழில் துறை அபிவிருத்திக்கான தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் கொள்கை தொடர்பான ஐந்தாண்டு மூலோபாயத் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சு அதனைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை