தேசிய நல்லிணக்கத்தைச் சிதைக்கும் அம்பிட்டிய தேரர் போன்ற பிரகிருதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துக! அமைச்சர் டக்ளஸூம் காட்டம்
தேசிய நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையிலான எகத்தாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் தரம் கெட்ட வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
துரதிஸ்டவசமாக இந்நாட்டிலே இவ்வாறான பிரகிருதிகள் அனைத்து தரப்பிலும் இருந்திருக்கின்றனர், இருக்கின்றனர் என்பது வேதனைமிகு யதார்த்தமாக இருக்கின்றது.
இந்த நாடு இன்றளவும் மீளமுடியாமல் தவிப்பதற்கு பிரதான காரணமாக இருக்கின்ற கடந்த கால யுத்தம் தோன்றுவதற்கு இரண்டு தரப்பிலும் இருந்த இவ்வாறான பிரகிருதிகளின் கருத்துக்களும் செயற்பாடுகளுமே காரணமாக இருந்தன என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
அதேபோன்று உலகிற்கு சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டியவர்களின் இவ்வாறான தரங்கெட்ட செயற்பாடுகள் தொடர்பில் மரியாதைக்குரிய பௌத்த பீடங்கள் அக்கறை செலுத்த வேண்டும்.
இந்த நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். காவி உடை கவசமாகப் பயன்படுத்தப்படுவதை சட்டத்தை பாதுகாக்க வேண்டிய தரப்புக்கள் அனுமதிக்கக் கூடாது.
மதகுரு என்று சொல்லப்படுகின்ற குறித்த நபரின் செயற்பாடுகள் மற்றும் பின்னணிகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.
இவை அனைத்தும் விரிவாக ஆராய்ந்து விஷக் கிருமிகள் அனைத்தும் களையப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
இதுதொடர்பாக, எதிர்வரும் நாள்களில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்.
யதார்த்தைப் புரிந்து கொண்டு ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான எமது அரசாங்கம் விரைவில் இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. – என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை