74 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் தமிழரசு மாநாட்டை நடத்த முஸ்தீபு!

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி வவுனியாவில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் குறித்த கூட்டத்தில், கட்சியின் வருடாந்த மாநாட்டை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனை பதவி விலகுமாறு குறிப்பிட்ட கருத்துகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கூட்டத்தின்போது, இலங்கைத் தமிழரசுக்கட்சி 1949 டிசெம்பர் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் 74 ஆவது வருட பூர்த்தி எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரவுள்ளமையால் குறித்த தினத்தில் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்கான முன்மொழிவைச் செய்வதற்கு சில உறுப்பினர்கள் முஸ்தீபு செய்யவுள்ளனர்.

அதேநேரம், தற்போது வரையில், யாழ்ப்பாணம், அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள தமிழரசுக்கட்சியின் மூலக்கிளைகளை மறுசீரமைக்கும் பணிகள் நிறைவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.