மன்னிப்பு கோரினார் சுமண ரத்ன தேரர்!
தென்னிலங்கையிலுள்ள தமிழர்களை வெட்டுவேன் என சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –
மட்டக்களப்பு, ஜயந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானம் கடந்த 21ஆம் திகதி தரைமட்டமாக்கப்பட்டது. அங்கு எனது தாயின் சமாதியும் உள்ளதால் பொலிஸாருடன் அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டேன்.
இதன்போது சிலர் என்னை தூண்டும் வகையில் காணொளிகளை எடுக்க ஆரம்பித்தமையால் நானும் கோபத்தில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தேன். இதனை தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர், தமிழ் மக்களை குழப்புவதற்காக பயன்படுத்தி வருகிறார்கள்.
நான் கூறிய கருத்துகள் இனவாதத்தை தூண்டும் கருத்துகள் என தமிழ் மக்களிடம் கூறி வருகிறார்கள். விசேடமாக, கூட்டமைப்பின் உறுப்பினர் இரா. சாணக்கியன் இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நான் ஒரு பைத்தியக்காரன் என்றும் எனது தாயின் சமாதி இங்கே இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்தே சாணக்கியன்தான் இந்த மயானத்தை உடைக்க பணித்துள்ளார் என நான் தெரிந்துகொண்டுள்ளேன். அப்படி அவர் செய்யாவிட்டால் இந்த செயற்பாட்டை ஏன் அவர் சரியாக காண்பிக்க முற்பட வேண்டும்?
இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றபோது, மயானத்தை தரைமட்டமாக்கிய தரப்பினர் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, மீண்டும் மயானத்தை அமைத்துத் தருவதாகவும் கூறியுள்ளனர்.
நானும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக நீதிமன்றத்திடம் அறிவித்தேன். நான் கவலையுடன் தான் அன்று அவ்வாறு பேசினேன்.
இது இனவாதக் கருத்துக் கிடையாது. தனி ஈழம் வரப்போவதாகத் தெரிவித்து, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே சில நபர்கள் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இதனை அனைத்து மக்களும புரிந்துகொள்ள வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை