மலையக தமிழ் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்! தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உறுதி

இலங்கையில் வாழும் மலையக மக்களுக்கும் இந்தியாவில் வாழும் மலையக மக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி என்றும் ஆதரவாக இருக்கும். அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கொழும்பு சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற ‘நாம் 200’ தேசிய நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

‘நாம் 200’ என்பது கடுமையான பாதைகளை நினைவுபடுத்துகிறது. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த மலையக மூதாதையர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களை உருவாக்கி நாட்டை வளப்படுத்தினார்கள்.

கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் போராட்டம் ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு மலையக மக்கள் இந்த 200 ஆண்டுகாலத்தை நிறைவு செய்துள்ளார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல துயரங்களை அனுபவித்த மக்கள் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டதன் பின்னரும் அரசியல் ரீதியில் பிரித்தாளப்பட்டார்கள்.

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தால் சுமார் 3 லட்சம் மலையக தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் குடியேறி புதிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள்.

இந்த 200 ஆண்டு காலத்தில் உலகில் வேறெந்தவொரு இனமும் இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ளவில்லை. தனிவீடு வேண்டும் என்பது பெருந்தோட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மலையகத்தில் இந்திய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வெகு விரைவில் இந்தத் திட்டம் நிறைவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பெருந்தோட்ட மக்களுக்கு சொந்த வீட்டுடன் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளதை வரவேற்கிறோம்.

2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி நுவரெலியா மாவட்டத்துக்கு சென்று அங்கு வாழும் மலையக மக்களைச் சந்தித்து உரையாடினார்.

பெருந்தோட்ட மக்களின் உழைப்பு மற்றும் விடாமுயற்சியை பிரதமர் நரேந்திர மோடி வியந்து பார்த்து அதனை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொண்டார்.

இலங்கையில் உள்ள மலையக மக்களுக்கும் இந்தியாவில் வாழும் மலையக மக்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாக இருக்கும். அவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.