ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்: ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

அத்துடன், இந்தத் தீர்மானம் தொடர்பில் மாவை சோ.சேனாதிராசா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் தனித்தனியாகக் கலந்துரையாடுவதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மன்னாரில் உள்ள ரெலோவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குறித்த கூட்டணியில் அங்கத்துவம் பெற்றுள்ள ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் குறித்த கூட்டம் சம்பந்தமாக அக்கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில் –

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் சம்பந்தமாகக் கவனம்செலுத்தியதோடு ஆழமான ஆராய்வுகளைச் செய்து தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

முதலாவதாக, வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தால் ஆகியவற்றின் சாதக, பாதக நிலைமைகள் சம்பந்தமாக ஆராயப்பட்டதோடு, அரசாங்கத்தின் ஜனநாயக விரோதமான மற்றும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கு தழுவிய பாரிய போராட்டங்களை அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்திலும் முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இரண்டாவதாக, மயிலத்தமடு மதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக்கான நியாயமான கோரிக்கை தொடர்பாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானம் உடனடியாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதோடு அதில் தாமதங்கள் காணப்படுமிடத்து, அரசாங்கத்துக்கு அழுத்தமளிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, சுற்றுச்சூழல் சம்பந்தமாக அதியுயர் உணர்வு ரீதியான மன்னார் தீவிலும், அதற்கு வெளியில் உள்ள பகுதிகளிலும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்களின் பல இலட்சங்கள் பெறுமதியான கொடுப்பனவுக்காக பொதுமக்கள் விற்பனை செய்வதை தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு அதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக, வடக்கு மாகாணத்திற்கு ஏனைய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் போன்று சீனத்தூதுவரும் விஜயங்களை மேற்கொள்வதில் எவ்விதமான பிரச்சினைகளும் கிடையாது. எனினும், தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் உலருணவுப்பொதிகளை வழங்குவதன் ஊடாக சமூக ரீதியான குழப்பங்களை ஏற்படுத்துவதையும், அதேபோன்று, இந்தியாவுக்கு மிகவும் அண்மித்த பகுதியாக வடக்கு காணப்படுகின்ற நிலையில் பிராந்திய பதற்றங்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதையும் வெளிப்படுத்துவதென தீர்மானின்கப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக, தொடர்ச்சியாக, தென்னிலங்கையின் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றபோதும், அவற்றை நிறைவேற்றுவதில் கரிசனைகளைக் கொண்டிருக்காத நிலைமைகள் தொடருகின்றமையால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதெனவும், அந்த வேண்பாளருக்கு வடக்கு,கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக தென்னிலங்கைக்கும், சர்வதேசத்துக்கும் நிலைமைகளை அம்பலப்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுவதோடு அவ்விதமான பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் தனித்தனியான கலந்துரையாடல்களை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆறாவதாக, வடக்கு,கிழக்கில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மாவட்டக் கிளைகளை ஸ்தாபிப்பதோடு, கூட்டணியின் தேசிய அமைப்பாளர் கோவிந்தன் கருணாகரத்தின் செயற்பாடுகளுக்கு பக்கத்துணையாக வடமாகாணத்திற்கு குருசுவாமி சுரேனையும், கிழக்கு மாகாணத்துக்கு இரா.துரைரெட்ணத்தையும் துணை அமைப்பாளர்களாக நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏழாவதாக, தமிழ்மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக தமிழ்த் தேசியத் தரப்பில் உள்ள ஏழு கட்சிகள் பொதுவான தளத்தில் நின்று பயணிப்பது மற்றும் ஏகோபித்த தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் பொதுவான மத்தியஸ்தர்களின் துணையுடன் ஒத்துழைப்புக்களை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.