நிர்மலா சீதாராமனை தமிழ் அரசியல் கட்சிகள் சந்திக்காதமை எதற்காக? தெளிவுபடுத்துகிறார் சுமந்திரன்
இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இலங்கை விஜயம் குறித்த தகவல்கள் ‘நாம் 200’ நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் இரகசியமாக பேணப்பட்டமையால், அவருடனான சந்திப்புக்கு அனுமதி கோருவதற்குத் தமக்குப் போதுமான கால அவகாசம் இருக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நாம் 200’ நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களில் மகாநாயக்க தேரர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
அதுமாத்திரமன்றி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்துவதற்கான செயற்திட்டங்களுக்காக இந்திய அரசாங்கத்தால் 15 மில்லியன் டொலர்களை அன்பளிப்புச் செய்வதற்கான இருதரப்பு ஆவணங்கள் ஜனாதிபதிக்கும் இந்திய மத்திய நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஆனால் இந்திய அரசாங்கத்தின் சார்பில் தலைவர்கள் எவரேனும் இலங்கைக்கு வருகைதந்தால், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துவிட்டுச் செல்லும் வழக்கத்துக்கு மாறாக, இம்முறை நிர்மலா சீதாராமனுக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவில்லை. எனவே இச்சந்திப்பு இடம்பெறாமைக்கான காரணம் என்னவென்று வினவியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘நாம் 200’ நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டுக்கு வருகைதருகிறார் என்ற விடயம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களால் மிகவும் இரகசியமாகவே பேணப்பட்டது. நிர்மலா சீதாராமனின் வருகை குறித்து அவர்கள் முன்னரே எம்மிடம் கூறியிருந்தால், நாம் அவரைச் சந்திப்பதற்கு கால அவகாசம் கோரியிருப்போம். எனவே இதனை எம்மிடம் கூறுவது பற்றி இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் தான் சிந்தித்திருக்கவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் ‘நாம் 200’ நிகழ்வில் பங்கேற்றிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர், பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதி ராம் மாதவ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை ஆகியோரை நிகழ்வில்வைத்து சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்த சுமந்திரன், அவர்கள் நாட்டின் சமகால நிலைவரம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தீவிரமடைந்துவரும் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி தான் பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு இடம்பெறாமை குறித்து கருத்து வெளியிட்ட ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், இவ்விடயத்தில் இந்தியாவை குறை கூற முடியாது எனவும், தமக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையில் ‘யாரை சந்திப்பது?’ என்ற கேள்வி அவர்களுக்கு இருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் நிதியுதவிகள் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கருத்துக்களேதுமில்லை