குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

விசா இல்லாமல் சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருந்த 26 வீட்டுப் பணிப்பெண்கள் இலங்கை தூதரகத்தின் மூலம் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இன்று புதன்கிழமை (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சுமார்  2000 இற்கும்  மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் மீண்டும் நாடு திரும்புவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்திருந்த நிலையில் 26 பேர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இக்குழு இன்று காலை 07.05 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இவர்கள் இலங்கைக்கு வருவதற்கான பயணச்சீட்டுகளை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைத் தூதரக அதிகாரிகள் குவைத்தின் குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதித்துறை மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து இவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் அபராத தொகை ஆகியவற்றை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குவைத்தில் எஞ்சியிருக்கும் இலங்கை பிரஜைகள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.