இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்க ஏற்பாடு! ரோஹண திஸாநாயக்க கூறுகிறார்
இலங்கையில் 2024 காலாண்டுக்குள் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் வருமானத்தையும் நோக்கமாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகமொன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பட்டப்படிப்புக்களை நிறைவு செய்யக் கூடிய வகையில் இந்த பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றன.
2024 முதற்காலாண்டுக்குள் இதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
தனியார் துறையினரின் ஒருங்கிணைப்புடன் தனியார் பல்கலைக்கழகமாகவேனும் இதனை நடத்திச் செல்ல எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் சீன நிறுவனமொன்றுடனும் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தென் ஆசியாவிலிருந்து ஒரு வருமான வழியாகக் கூட இது அமையக் கூடும்.
இந்தியா, மாலைதீவு, பாக்கிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலுள்ளவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தை நாடினால் அதன் மூலம் எம்மால் வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அரச, தனியார் கூட்டு முயற்சியில் இதனை அமைக்க எதிர்பார்த்துள்ளோம்.
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு 125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு ஒரு பில்லியன் டொலரேனும் தேவைப்படும். ஆசியா உட்பட ஏனைய நாடுகளையும் இலக்காகக் கொண்டு இதனை நிர்வகித்துச் செல்லும் பட்சத்தில் வருமானத்தில் சிக்கல் ஏற்படாது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை