ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளையும் பாதுகாப்பவர்களையும் மக்கள் நன்கறிவார்கள்! காவிந்த ஜயவர்தன கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, தமது உறவுகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் இன்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, யாருக்காக நடத்தப்பட்டது என்பதையும், தற்போது அவர்களைப் பாதுகாப்பவர்களையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

நாட்டில் சட்டம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் ஒருசிலர் சட்டத்தில் இருந்து விடுபடுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. உண்மை பகிரங்கப்படுத்தப்படவில்லை. எவரும் தண்டிக்கப்படவுமில்லை.

2019 ஆம் ஆண்டு அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் குற்றவாளிகளைத் தண்டிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதிகள் பொய்யாக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவனது தரப்பினர்கள் முதல் குற்றவாளிகளாகவும், குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் போதுமான அளவு புலனாய்வு தகவல் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அரச மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டாம் தர குற்றவாளிகளாகவும், முதல் குற்றவாளிகளையும், இரண்டாம் தர குற்றவாளிகளையும் பாதுகாக்கும் தரப்பினர் மூன்றாம் தர குற்றவாளிகள் எனவும் இந்த குண்டுத்தாக்குதலில் குற்றவாளிகளை அடையாளப்படுத்தலாம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, தமது உறவுகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் இன்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, யாருக்காக நடத்தப்பட்டது என்பதையும், தற்போது அவர்களை பாதுகாப்பவர்களையும் நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உட்பட  தேசிய கத்தோலிக்க பேராயர்கள் உயிர்த்த  ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள். அந்தக் கடிதத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தக் கடிதத்தை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விசாரணைகளை முன்னெடுக்குமாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்டுள்ள எம் சமூகத்தினருக்கு எவ்வாறு நீதி கிடைக்கும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.