வழங்கிய வாக்குறுதியை மதித்து சஜித் பதவியை விலக வேண்டும்! மஹிந்தானந்த
மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஸ சபையில் உறுதியளித்தபடி அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுன உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –
மத்திய கலாசார நிதியத்தின் நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்திருந்தார்.
கலாசார நிதியத்தின் நிதி முறையற்ற விதத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நிதி பிரயோகம் சட்டத்திற்கு முரணானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என மத புத்தசாசன,மத விவகார, கலாசார அமைச்சரும் தெரிவித்துள்ளார்.
நிதி முறைகேடாக பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் அதற்கான கணக்காய்வு அறிக்கையை நான் சபையில் சமர்ப்பித்துள்ளேன். அதன் மூலம் இந்த மோசடி உறுதியாகியுள்ளது.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் தமது மனைவியின் சிகை அலங்கார நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகாரிகளை சேர்த்துக் கொண்டுள்ளமை தொடர்பிலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் அவர் நாடாளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய நாடாளுமன்றத்தின் கௌரவத்தை மதித்து உடனடியாக பதவி விலக வேண்டும். – என்றார்.
இதன்போது அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், கலாசார அமைச்சுக்கான செயல்பாடுகள் அனைத்தும் அமைச்சரவை அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நான் சபையில் உறுதிப்படுத்தினேன். – என்றார்,
கருத்துக்களேதுமில்லை