தமிழர்களை ஒருபோதும் இந்தியா கைவிடாது: டில்லிசந்திப்பில் முக்கிய அதிகாரிகள் தெரிவிப்பு! சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார்
டில்லியில் நடைபெற்ற இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட சந்திப்புக்களின்போது, இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாது என்ற இறுக்கமான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த தரப்பினர் வடக்கு, கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழ்த் தலைவர்கள் பற்றியும் ஆழமான புரிதலைக் கொண்டிருந்தமை வியப்பளித்ததாக தெரிவித்த விக்னேஸ்வரன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அத்தரப்பினர் அதீதமான கரிசனைகளை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அண்மையில் டில்லிக்கான விஜயமொன்றை வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அரசியல் தலைவர்கள், சிவில் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்த நிலையில் அந்த விஜயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களுக்கு தாயகத்தில் நடைபெற்ற அவலங்கள் சம்பந்தமாக நூலொன்றை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்திருந்தார்கள். அத்துடன், டில்லியில் முக்கிய சில தரப்பினரையும் சந்திப்பதற்கும் கோரியிருந்தார். அதேபோன்று டில்லி பல்கலைக்கழகத்திலும் தமிழ் மக்களின் விடயங்கள் சம்பந்தமாக உரையாற்றுமாறும் கோரியிருந்தார்கள்.
ஏற்கனவே நான் அகமதாபாத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்குபற்றிபோது தமிழர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக அவர்களுக்கு போதுமான தெளிவான நிலைமைகள் இன்மையை நான் அவதானித்திருந்தேன்.
அதனடிப்படையில், வட இந்தியர்கள் மற்றும் அதிகாரிகள், புத்திஜீவிகள் மத்தியில் எமது விடயங்களைப் வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமெனக் கருதி அந்த அழைப்பை ஏற்றுச்சென்றிருந்தேன்.
இதன்போது வடக்கு, கிழக்கில் இருந்து இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதத்தலைவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழ் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், நடைபெற்ற சந்திப்புக்களின்போதும், கலந்துரையாடல்களுக்கும், உரையாற்றுவதற்கும் கிடைத்த தளங்களிலும் எமது நிலைப்பாடுகளையும், எமது மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தேன்.
குறிப்பாக, எமது மக்கள் நிம்மதியாக வாழ்க்கையொன்றை முன்னெடுப்பதாக இருந்தால் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்று கூட்டு சமஷ்டி அடிப்படையில் தான் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.
அதேநேரம், 13ஆவது திருத்தச்சட்டத்தை, ஒற்றையாட்சிக்குள் அமுலாக்குவதால் அதிகார பரவலாக்கம் நடைபெறுவதாக காண்பிக்கப்பட்டாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அதிகாரப் பகிர்வையே எதிர்பார்த்துள்ளனர். அதற்காகவே தொடர்ச்சியாக ஆணை வழங்கியும் வந்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டினேன்.
மேலும், இருநாடுகளுக்கு இடையில் நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தம் என்ற அடிப்படையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதுள்ளதோடு அதில் இலங்கை அரசாங்கம் எவ்விதமான மெத்தனப்போக்கை பின்பற்றுகின்றது என்பதையும் வெளிப்படுத்தினேன்.
அதுமட்டுமன்றி, சர்வஜனவாக்கெடுப்பு ஒன்று நடத்துவதற்கான தேவையையும் குறிப்பிட்டதோடு, சிங்களப் பெரும்பான்மை, பௌத்த மதவாதம் உள்ளிட்டவற்றின் பெயரால் நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புக்களையும் சுட்டிக்காட்டினேன்.
இதேநேரம், எமக்கும் மத்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் புத்திஜீவகளுடன் நடைபெற்ற சந்திப்பு மிகவும் முக்கியமானது. எனினும் அவர்களின் பெயர்களை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை.
ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு எம்மால் சொல்லப்பட வேண்டிய செய்தியை அவர்களிடத்தில் பகிர்ந்துகொண்டுள்ளேன். அதேநேரம், அவர்களுடனான சந்திப்பின்போது, அவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்கள் ஒவ்வொருவர் தொடர்பாகவும் ஆழமான முறையில் அறிந்து வைத்திருக்கின்றமையை இட்டு நான் ஆச்சரியமடைந்தேன்.
அதுமட்டுமன்றி, அவர்கள் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்து வருகின்ற அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பிலும் முழுமையான தகவல்களைக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் முக்கியமான மூன்று விடயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.
அதில் முதலாவதாக, இந்தியா தமிழர்களை எப்போதும் கைவிடாது என்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இரண்டாவதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் அதிகமான கவனம் கொண்டிருப்பதோடு அந்த விடத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் வகிபாகம் முக்கியமானது என்றும் குறிப்பிட்டனர்.
மூன்றாவதாக, வடக்கு, கிழக்கு மக்கள் முகங்கொடுக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும், பிரதிநிதிகளின் நிலைப்பாடுகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளமையை வெளிப்படுத்தினார்கள். அதனடிப்படையில், அடுத்துவரும் காலத்தில் முக்கியமான சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை