தேசிய வேட்பாளராக ரணில் களமிறங்குவார்! பிரசன்ன ரணதுங்க திட்டவட்டம்
பெட்டிக்கடை அல்லது நிறுவனத்தை நிர்வகிப்பதை போன்று நாட்டை நிர்வகிக்க முடியாது. வீரவசனம் பேசுபவர்களால் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியாது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாத்திரமே உள்ளது. பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்காக நாட்டு மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நிர்வாகத்தை இந்த ஆண்டும் தோற்றுவிக்க வேண்டுமென வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
உடுகம்பொல பகுதியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –
இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வகிபாகம் என்னவென்று அனைவரும் கேட்கிறார்கள். ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன தெரிவு செய்யவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதா? இல்லையா? என்பதை கட்சி பரிசீலனை செய்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு அவருக்கு மாத்திரமே தகுதி உள்ளது.
2022 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான போராட்டம் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. பல பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு எட்டப்பட்டுள்ளது. நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
தேசிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்தார்கள். யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக 2004 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்க்ஷவை ஜனாதிபதியாக்கினார்கள். நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினார்கள்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினார்கள். அதுபோல இந்த முறை தேசிய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும்.
ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதாக இருந்தால் கட்சி என்ற அடிப்படையில் கூட்டணியமைத்து அவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேசிய வேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாவார்.
ஜனாதிபதி வேட்பாளர் போட்டி தற்போது தீவிரமடைந்துள்ளது. பெட்டிக்கடை அல்லது நிறுவனத்தை நிர்வகிப்பதை போன்று நாட்டை நிர்வகிக்க முடியாது. வீரவசனம் அனைவருக்கும் பேச முடியும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு குறுகிய காலம் மாத்திரமே மிகுதியாகவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க என்பவர் வீரவசனம் பேசாத வீரத்தை செயலால் காட்டும் சிறந்த தலைவர். ஆகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை அவருக்கு மாத்திரமே உள்ளது. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை