நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை எமது அரசில் இரத்துச்செய்வோம்! ஹர்ஷ டி சில்வா உறுதி

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு 98 சதவீதமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எமது ஆட்சியில் இந்த சட்டமூலம் முழுமையாக இரத்து செய்யப்படும். ஜனநாயகம் நாடாளுமன்றத்துக்குள் உள்ளதா, வெளியில்  உள்ளதா என்பது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளைபட பாதுகாக்க வேண்டும், 225 உறுப்பினர்களும்  அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்கிறோம். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான அமைப்புகள்  பல யோசனைகளை முன்வைத்துள்ள நிலையில்  அவற்றை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பில் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 98 சதவீதமானோர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆகவே ஜனநாயகம் நாடாளுமன்றத்தில் உள்ளதா? அல்லது வெளியில் உள்ளதா என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

சமூக  ஊடகங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இந்த சட்டமூலம்  கண்காணிப்பதற்கு பதிலாக அடக்குமுறைகளை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.ஆகவே எமது அரசாங்கத்தில் இந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு,அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டமியற்றப்படும்.

இந்த  சட்டமூலத்தில் சமூக வலைத்தளங்கள் குற்றவாளியாக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவேற்றம் செய்பவர்கள் குற்றவாளியாக பார்க்கப்பட வேண்டும். சமூக வலைத்தளங்களை குற்றவாளிகளாக சித்திரிப்பதை  பேஸ்புக், மெட்டா, கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த சட்டமூலத்தால் கிராமிய மற்றும் நகர வணிக பொருளாதாரம் பாதிக்கப்படும். அத்துடன் அரசாங்கத்தின் டிஜிற்றல் பொருளாதாரம் என்ற இலக்கு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.