ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுப்பது ரணிலோ பாராளுமன்றமோ அல்ல – ரில்வின் சில்வா

ஜனாதிபதி தேர்தலை ஆணைக்குழுவைத் தவிர வேறு எவரும் தீர்மானிக்கத் தேவையில்லையென்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் இரு தடவைகள் ஊடகங்களுக்கு கூறியுள்ள என களுத்துறை மாவட்ட மீனவர் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்  ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்குத்தான் இருக்கிறது. எனவே, இந்த வருடம் செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும்  ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். அதில் சந்தேகமில்லை.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாக்க வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. எம்மவர் ஜனாதிபதியானதன் பின்னர் இந்தப் பாராளுமன்றம் எமக்குத் தேவையில்லையே.  எனவே, இந்தப் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய பாராளுமன்றம் ஒன்றை ஸ்தாபித்து இந்த நாட்டை முன்னேற்ற  வேண்டும்.

அநேகமாக முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்தியே அன்றி வேறெதற்கும் இல்லை.

சாதாரண மக்களின் ஆய்வுகள் மாத்திரம் அல்ல. உளவுத்துறை தகவல்களும் அதனைத்தான் கூறுகின்றன. எனவே, எவரும் பதற்றமடையத் தேவையில்லை. இதனால் இப்போது ஆட்சியாளர்கள் பதற்றமடைந்துள்ளார்கள். எங்களிடமிருந்து தவறுதலாக வெளிவரும் ஒரு சொல்லை பிடித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

அதை வைத்துக் கொண்டு அவர்களுக்கு விரும்பிய கதையை புனைவார்கள். அந்தக் கதைக்கு ஊடக உரையாடல் இடம்பெறும். அதற்காக பிக்கெட்டிங் செய்வார்கள். பத்து பதினைந்து பேரை சேர்த்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். எமது கொள்கையை நாம் தெளிவுப்படுத்துகின்ற போதிலும் அதற்கு அவர்கள் செவிசாய்க்க மாட்டார்கள்.

ஏனென்றால், அந்தளவிற்கு தேசிய மக்கள் சக்தி அவர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. எனவே, இந்த நாட்டை நாசமாக்கிய சக்திகள் பயந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் எங்களுக்கு எதிராக சேறுபூசுகிறார்கள். அவதூறு கற்பிக்கிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.