எம்முடன் இணைந்து பயணிக்க சிறீதரன் முன்வருதல் வேண்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம்

 

ஐக்கியத்தை விரும்பும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர் எம்முடன் கைகோர்த்துப் பயணிப்பதற்கு வரவேற்கின்றோம் என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

புதிய தலைவராக பதவியேற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் ஐக்கியத்தைப் பற்றி பிரஸ்தாபித்திருப்பதை வரவேற்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியராகிய நாம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகிறோம்.

இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறிதரனுக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இராஜவரோதயம் இராசமாணிக்கம், வன்னியசிங்கம், நாகநாதன், அமிர்தலிங்கம் போன்றோரால் தலைமை தாங்கப்பட்டு, தமிழ் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பாரம்பரியமிக்க ஒரு கட்சியின் தலைவராக நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனித்து நின்று, தனது கோரிக்கைகளை வெல்ல முடியவில்லை என்ற காரணத்தால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்றவை இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய பாரம்பரியமும் தந்தை செல்வா தலைமையில் நடைபெற்றது.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக 1976 ஆம் ஆண்டிலிருந்து தனது கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தாமல், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பதே தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஒரு ஐக்கிய முன்னணி என்பதை தந்தை செல்வா அடையாளம் காட்டினார்.

அதன் பின்னர், 1985ஆம் ஆண்டில் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ புரட்சி அமைப்பு ஆகியோர் இணைந்து திம்பு கோட்பாடு எனப்படும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதுவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கான அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.

2002ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் செயற்பட்டு வந்தனர். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக விடுதலைப் புலிகள் ஆயுதப் போராளிகளாக செயற்பட்ட வேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழிமுறையில் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் செயற்பட்டு வந்தார்கள்.

சம்பந்தனால் தலைமையேற்று நடத்தப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நிலவிய பல்வேறு முரண்பாடுகள் காரணமாக அதில் இணைந்திருந்த பல கட்சிகளும் தனிநபர்களும் வெளியேறியமை மாத்திரமல்லாமல், இறுதியில் 2023ஆம் ஆண்டு நடைபெற இருந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தாங்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற காரணத்துக்காக, அவர்களும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்கள். அதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்துள்ளது.

இந்த நிலையில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயக போராளிகள் ஆகியோர் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற ஒரு ஐக்கிய முன்னணியை அமைத்துள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான ஒரு யாப்போ அமைப்பு வடிவமோ இல்லாத காரணத்தால் கூட்டமைப்புக்குள் பல்வேறு முரண்பாடுகள் அவ்வப்போது தோற்றம் பெற்றது.

இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு, நாம் உருவாக்கிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்காக ஒரு யாப்பு வரையப்பட்டிருக்கின்றது. அது தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டும் இருக்கின்றது. இந்தக் கூட்டணிக்கென்று குத்துவிளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்கிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி, யாப்பின் அடிப்படையில் நிறைவேற்றுக் குழுவையும் கட்சிக்கான கட்டமைப்பையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலத்தின் தேவை கருதி, 2002ஆம் ஆண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோதும் அதனை பதிவு செய்ய வேண்டும் என்று அதில் அங்கம் வகித்த பல கட்சிகள் தொடர்ந்தும் கோரிக்கைகளை வைத்தபோதும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதற்கு செவிசாய்க்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 22 வருட காலமாக தமிழ் மக்களுக்காக போராடும் ஒரு அரசியல் கட்சியாக தன்னை நிறுவனப்படுத்திக்கொள்ளாமல், தேர்தல் காலங்களில் கூட்டாகவும் பின்னர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக முடிவெடுத்துச் செயற்படுவதுமே இன்று வரை தொடர்கின்றது. இதன் காரணமாகவே இடைப்பட்ட காலங்களில் பல கட்சிகளும் அதிலிருந்து வெளியேறின.

இந்த நிலையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிவஞானம் சிறிதரன் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியோரை ஒன்றிணைத்து 2009ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் தீர்க்கமான சிந்தனையுடன் பயணிக்கின்றது. இதன் அடிப்படையில்தான் ஒரு வருடத்திற்கு முன்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டு, அது இன்று வரை தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், புதிய புதிய அமைப்புகள் தொடர்பாக சிந்திப்பதை விடுத்து, ஏற்கனவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஐக்கிய முன்னணியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஏனைய கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.