28 கட்சிகள், 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கூட்டணியில் இணைய எம்முடன் பேச்சு! நிமல் லான்சா கூறுகிறார்
புதிய கூட்டணியில் இணைவதற்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியான அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை எமது கூட்டணி முன்னெடுக்கும் என, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
புதிய கூட்டணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஜா-எல நகரில் நடைபெற்ற முதலாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் லான்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் –
பெருமளவிலான எம்.பி.க்களையும், கட்சிகளையும் இணைத்து எதிர்காலத்தில் மிகப் பெரிய கூட்டணி உருவாக்கப்படும். வரலாற்றில் முதன்முறையாக கட்சி சின்னமோ, கட்சியோ இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை வெற்றி பெற செய்வதற்காக ஏராளமானோர் திரண்டுள்ளனர். தலைவரோ, தலைமைக் குழுவோ இல்லாமல் எமது அழைப்பை ஏற்று வந்துள்ள மக்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதற்காக இந்தக் கூட்டணி ஒன்று கூடவில்லை. பொருளாதாரத் திட்டத்தை வலுப்படுத்தி நாட்டை மீட்டெடுக்கவே கூடியுள்ளது. இதுவரை வந்த அரசியல் பயணம் கடந்த இரண்டு வருடங்களில் பின்னோக்கி சென்றுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே 30 வருட அரசியல் பின்னோக்கிச் சென்றுள்ளது. கற்ற சிலர் அவரை சூழ்ந்து கொண்டு, முதல் பணியாக வரியைக் குறைக்க ஆலோசனை வழங்கினர். இந்த ஆலோசனையை வழங்கியவர் நாலக கொடஹேவா. இப்போது அவர் சஜித்துக்கு அறிவுரை வழங்குகிறார்.
மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதற்காகவே இந்த பணியை ஆரம்பித்துள்ளோம். மக்களுக்கு யதார்த்தத்தை சொல்ல, வருமானம் மற்றும் செலவு என்றால் என்ன? வருமானத்தைப் பெருக்கி, செலவுகளைக் குறைக்கும் முறையைக் கூற வேண்டும். இதைப் பற்றி அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுவதில்லை. மக்களுக்கு உண்மையையும், யதார்த்தத்தையும் புரிய வைக்க இப்புதிய கூட்டணி முடிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டணிக்கு ஒரு தலைவர், கட்சி, சின்னம் இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களும், அதிக எண்ணிக்கையிலான கட்சிகளும் சேர்க்கப்பட்டு மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும்.
ஜனாதிபதி 14 மாதங்களில் 14 தடவைகள் வெளிநாடுகளுக்கு சென்றதாக அநுர குமார குறிப்பிடுகின்றார். நாட்டை மீட்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு சர்வதேச நாடுகளுக்குச் செல்ல வேண்டியவர் செல்ல வேண்டும். அநுர குமாரவால் ஏனைய ஜனாதிபதிகளைப் போன்று சர்வதேச நாடுகளுக்குச் சென்று பணியாற்ற முடியாது. சர்வதேச நாணய நிதியம் வந்ததும் பயந்து ஒளிந்து கொண்டார்.
உலகிற்கு புதிய தொழில்நுட்பத்துடன் செல்லும் தலைவர் தேவை. அவ்வாறின்றி ஏழ்மை மனப்பான்மை கொண்ட, கிணற்றுத் தவளை மனநிலையுடன் செயற்படும் ஊமை கதாபாத்திரங்கள் தேவையில்லை. அநுர குமார அவர்கள் கூட்டத்தை நடத்திய மைதானமே இது. அன்றைய தினத்திலும் பார்க்க இன்று அதிகமான மக்கள் இங்கு வந்துள்ளனர். 22 மாவட்டங்கள் மற்றும் 160 தொகுதிகளில் எமது திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
இலங்கை முழுவதிலும் உள்ள பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், ஏனைய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர். இது ஓர் ஒத்திகை மாத்திரமே. அனைத்துக் கட்சிகளுடனும், அனைத்து எம்.பி.க்களுடனும் பேசி, துணைத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம். எனவே, அச்சமின்றி ஒன்றுபடுங்கள், பொய்யர்களும், தற்பெருமையாளர்களாலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
இந்த புதிய கூட்டணிக்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சு நடத்தி வருகின்றனர். இலங்கையில் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி, அதிக எண்ணிக்கையிலான எம்.பிக்கள் கொண்ட ஒவ்வோர் ஆசனத்திலும் மக்களை அணி திரளச் செய்து, ஜனநாயக ரீதியான ஓர் அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்க முடியும்.
கோட்டாபாய ராஜபக்ஷவை அழைத்து வருமாறு சமூக வலைத்தளங்களில் பெரும் அலை எழுப்பப்படுகிறது. நாம் அப்பணிக்கு செல்லவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக அலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வாய் வீச்சாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். – என்றார்
கருத்துக்களேதுமில்லை