நிகழ்நிலை காப்புச்சட்ட மூலத்தால் சீனாவைபோன்ற நிலைமை ஏற்படும் ஹிருணிகா சுட்டிக்காட்டு
நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் சீனாவைப் போன்ற நிலைமையே எமக்கும் ஏற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் –
அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீனாவைப் போன்ற நிலைமையே இலங்கையிலும் ஏற்படவுள்ளது.
எனவே இளைஞர்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்வர வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் இதனால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஏற்கனவே நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டமே போதுமானது. எனவே புதிதாக எந்த சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையில்லை.
விஷ்வ புத்த உட்பட மதங்களை நிந்தித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் பைத்தியக்காரர்களாவர். எனவே அவர்களுக்கு பிரதான ஊடகங்கள் முக்கியத்துவமளித்தமை தேவைற்ற ஒரு விடயமாகும். இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய அரங்கேற்றப்படும் நாடகமாகும்.
அண்மையில் நிமல் லன்சா உள்ளிட்ட குழுவினர் ரணிலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் இடம்பெறும் என இதனை அடிப்படையாகக் கொண்டு ஊகிக்க முடியும். இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பழைய அங்கத்துவ நாடாகும். அவ்வாறிருக்கையில் யுக்திய சுற்றி வளைப்புக்களை நிறுத்துமாறு ஐ.நா. விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் டிரான் அலஸ் கூறுகின்றார். இவ்வாறு முட்டாள்தனமாக பேசும் இவர்களை தும்புத்தடியால் அடித்து துறத்த வேண்டும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை