செட்டிகுளத்தில் பல வருடங்களாக வாழ்வாதாரம் குடிநீருக்காக போராடிய குடும்பத்துக்கு நீர் வசதி!
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றின் நீண்டகாலப் பிரச்சனையான வாழ்வாதாரம் மற்றும் குடி நீர் என்பவற்றுக்கு தீர்வு காணும் முகமாக குடி நீர் திட்டம் ஒன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகத்தான்குளம் கிராம அலுவலர் ஊடகவியலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகப் புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளரான கந்தையா ஸ்ரீமுருகதாஸ் என்பவரின் நிதி உதவியில் ஊடக உறவுகளின் பாலம் அமைப்பின் ஊடாக குறித்த குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
செட்டிகுளம், முகத்தான்குளம், இரண்டாம் பண்ணையில் மூன்று பிள்ளைகளுடன் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பம் ஒன்று நீண்ட நாள்களாக குடிநீர் பெறுவதில் இடர்பாடுகளை எதிர் நோக்கியிருந்ததுடன், வீட்டுடன் கூடிய வீட்டுத் தோட்டத்திற்கான காணிகள் இருந்தும் நீர் இல்லாமையால் வீட்டுத் தோட்டம் செய்ய முடியாது, பெண் நாளாந்தம் கூலி வேலைக்கு சென்று தனது மூன்று பிள்ளைகளையும், விசேட தேவைக்குட்பட்ட கணவனையும் கவனித்து தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்தி வந்தார்.
இக் குடும்பத்தின் நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக மோட்டருடன் கூடிய குழாய் கிணறு மற்றும் நீர் தொட்டி என்பன அமைத்து கொடுக்கப்பட்டன.
இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். அத்துடன் குறித்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக குறித்த காணியில் பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.
செட்டிகுளம், முகத்தான்குளம் கிராம அலுவலர் எஸ்.ரஞ்சினி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் திருமதி ஹெலன்மேரி மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை