பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்: இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
கண்டி மாவட்டத்தின் குண்டசாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பெயரை உடனடியாக நீக்க வேண்டும். கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் உயிருடன் உள்ள ஒருவரின் பெயரை பாடசாலைக்கு பெயரிட முடியாது.
ஆனால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமூகத்திற்கு தவறான ஒரு முன்னுதாரணம்.
எனவே குண்டசாலை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட்டுள்ளார்.
அதனை உடனடியாக நீக்குங்கள். குறிப்பாக உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதற்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். – என ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்
கருத்துக்களேதுமில்லை