இந்தத் தவறுகளை செய்யாதீர்கள்.!! மீறினால் நீங்கள் இப்படி மாறுவதை தடுக்க முடியாதாம்..!!

வாழ்க்கையில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான் நம்மை சேமிக்க விடாமல் தடுத்து விடுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எவர் ஒருவரிடத்தில் சேமிக்கின்ற பழக்கம் இல்லையோ, அவர் கட்டாயம் எதிர்காலத்தில் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை வரும்போது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அவர் ஏழையாவது உறுதி.

நம்மில் பல பேருக்கு ஒரு பழக்கம் உள்ளது. ‘வாட்ஸ் அப் அல்லது மெசேஜில் இந்த தகவலை 11 பேருக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு பணம் சேரும்’. என்று ஒரு தகவல் வந்திருக்கும். அதை நம்பி செயல்முறை படுத்தி பார்த்து, பணம் வருகிறதா என்று சோதித்துப் பார்ப்போம். ஆனால் சில நல்ல தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கும்.

அதை என்றாவது நடை முறையில் செயல்படுத்தி பார்த்திருப்போமா? உங்கள் வாழ்வில் நீங்கள் பணக்காரர்களாக இருந்தாலும், பிற்காலத்தில் ஏழை ஆகக்கூடாது என்று நினைப்பவர்களுக்காகவும், இன்று சராசரி வாழ்க்கை வாழ்பவர்கள் நாளை ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட கூடாது என்பதற்காகவும் இந்த பதிவு.

மனிதராகப் பிறந்துவிட்டால் ஒவ்வொருவரது வாழ்விலும் அவசரத் தேவை வரும். அதாவது எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள். எதிர்மறையாக சொல்வதாக நினைக்க வேண்டாம். இயல்பான ஒரு விஷயம் தான்.

திடீரென்று ஒருவருக்கு விபத்து நேரிடலாம். மூன்று மாதம் வேலைக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். திடீரென்று ஒருவருக்கு வேலை போய்விடலாம். இப்படி எதிர்பாராமல் வரும் செலவுகளை சமாளிக்க உங்கள் கைகளில் எமர்ஜென்சி ஃபண்ட் (Emergency Fund) உள்ளதா? உங்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் இருந்தால், 6 மாதம் வேலை இல்லாமல் இருந்தாலும் அல்லது எதிர்பாராத விதத்தில் வருமானம் வரவில்லை என்றாலும் உங்கள் குடும்பத்தை நீங்கள் சமாளிக்கும் தெம்பு உங்களுக்கு வேண்டுமென்றால், உங்கள் வருமானத்திலிருந்து மாதம்தோறும் ஒரு சிறு தொகையை சேமித்து வைத்திருந்தால் மட்டுமே அது முடியும். குறைந்தபட்சம் 6 மாத சம்பளம், 60 ரூபாய் பணம் உங்கள் கைகளில் இருப்பாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

அதிகமாக சொத்து வைத்திருக்கும் பணக்காரர்கள், தங்களுடைய வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்தாலும் அது விபரீதத்தில் தான் போய் முடியும். உங்கள் பரம்பரை சொத்தில் இருந்து பத்து, பத்து ரூபாயாக எடுத்து செலவு செய்து, கடைசியில் பத்து பைசா கூட இல்லாமல் போனவர்கள் இந்த உலகில் ஏராளம். பூர்வீக சொத்து இருந்தாலும் உங்கள் வருமானத்தில் தான் உங்களது செலவுகளை அடக்கிக் கொள்ள வேண்டும்.

படித்து முடித்துவிட்டு முதல் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால், முதல் சம்பளம் வந்துவிட்டது, முதலில் என்ன வாங்கலாம். என்று யோசிக்காமல், யாருக்கு ட்ரீட் வைக்கலாம் என்று யோசிக்காமல், அந்த சம்பள பணத்தில் இருந்து உங்களுடைய பிற்காலத்திற்க்கு எவ்வளவு சேமிக்கலாம் என்று முதலில் யோசியுங்கள். சிலபேருக்கு தங்களுடைய பூர்வீகச் சொத்தின் மீதோ அல்லது தங்கத்தின் மீதோ அதீத உணர்வு இருக்கும். அதாவது (Sentiment). இது அனைவருக்கும் உள்ளது தான். தவறு என்று கூறவில்லை.

ஆனால் இந்த சொத்துக்கள் மீது கடனை வாங்கிவிட்டு, நம்மால் அதை திருப்பி தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். வட்டியை மட்டும் கட்டிக் கொண்டு வருவோம். ஆனால் சற்று சிந்தித்து, பிற்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு கடனை சேர்த்து வைக்கக் கூடாது என்று எண்ணினால் Sentiment பார்க்காமல் அந்த சொத்தை விற்று விடுவதே நல்லது. தவறாக நினைக்க வேண்டாம். பூர்வீக சொத்திர்க்கு வட்டி கட்டி அழிந்தவர்கள் ஏராளம். கடைசியில் அந்த சொத்தையும் காப்பாற்றி இருக்க மாட்டார்கள். அதுவும் ஏலத்திற்கு போயிருக்கும்.

இது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கிரெடிட் கார்ட்(Credit Card). இது அவசரத் தேவைகளுக்கு கட்டாயம் உபயோகப்படும் ஒரு பொருள். ஆனால் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து இருப்பவர்கள் மட்டும், இந்த கார்டை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் என்ன பிரச்சினை வரும் என்று தெரியாதவர்களாக இருந்தால், உங்கள் கையில் இருக்கும் கிரெடிட் கார்டை இன்றே திரும்ப வங்கியில் ஒப்படைப்பது உத்தமமான ஒன்று. கையில் இருந்தால் அனாவசிய செலவிற்கு தேய்த்துக் கொண்டே இருப்பீர்கள். இதில் அழிந்தவர்கள் ஏராளம்.

இதற்கு வட்டி கட்டும் காசை எடுத்து வைத்தால், நம் சேமிப்பு எங்கேயோ போய்விடும். உங்கள் கையில் இருக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்பதற்கான ஆலோசனையை உங்களது உறவினர்களிடம் கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அனுபவசாலிகளிடம் மட்டுமே கேளுங்கள். அதாவது (financial advice). யார் வேண்டுமென்றாலும், யாருக்கு வேண்டுமென்றாலும் அறிவுரை கூறலாம். இதில் நமக்கு எது சரி. எது தவறு. என்பதை நிர்ணயிப்பது நம் கையில்தான் உள்ளது. தவறான இடத்தில் பணத்தைக் கொண்டு போய் போட்டு விட்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை கூட ஏற்பட்டு விடலாம்.

நீங்கள் கடன் வாங்கினால் அதை, தவறாமல் கண்ணியமாக திருப்பி கொடுப்பதில் எந்த ஒரு குறையையும் வைத்து விடாதீர்கள். உங்களால் கொடுக்க முடியவில்லை என்றாலும், அவர்களிடத்தில் சென்று, உங்கள் சூழ்நிலையை புரியவைத்து, கொஞ்ச காலம் கழித்து திருப்பித் தருவதாக சொல்லி, அவகாசம் கேட்டு, பேசுவதுதான் திறந்த முறையே தவிர, ஓடி ஒளிவது அல்ல. பிற்காலத்தில் உங்களுடைய அவசர தேவைகளுக்கு உதவி செய்ய 4 பேர் கட்டாயம் தேவை. இதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எந்த ஒரு பழக்கத்திற்கும் அடிமையாகி விடக்கூடாது. சிலருக்கு சம்பளம் மிகக் குறைவாக இருக்கும். ஆனால் ஆடம்பரப் பிரியர்களாக இருப்பார்கள். மாதம் ஒரு புது துணி, துணிக்கு ஏற்றது போல் செருப்பு, செருப்புக்கு ஏற்றது போல் கையில் பர்ஸ்., இப்படி தங்களுடைய ஹேபிட்(habit) என்று சொல்லி பணத்தை எக்கச்சக்கமாக செலவு செய்பவர்கள். தயவுசெய்து இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளுவது நல்லது.

நீங்கள் வயதானவர்களாக இருந்து வேலையில் ஓய்வு எடுக்கும்(Retired) காலம் வரப் போகிறதா? உங்களது ரிட்டயர்டு பணத்தை உங்களுடைய கடைசி காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களது பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் பிற்காலத்தில் மீதமுள்ள உங்களது வாழ்க்கையை நீங்கள் தானே வாழ்ந்தாக வேண்டும். அந்தப் பணத்தை வைத்து ஆடம்பரமாக திருமணம் செய்வது, ஆடம்பரமாக கார் வாங்குவது, ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பது இந்த தவறுகளை மட்டும் கட்டாயம் செய்து விடாதீர்கள். வாழும் போது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருந்தாலும், ‘இறக்கும்போது நிம்மதி அற்ற சூழலில் இருந்தால்’ நான் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். உங்களது கையில் இருக்கும் பணமானது சேமிப்பில் இருக்கும்.

அது பத்து வருடங்கள் கழித்து உங்கள் கைக்கு வரும்போது எதிர்கால விலைவாசியை எதிர்கொள்ளும் அளவிற்கு ஈடாக இருக்குமா? என்று சிந்தித்து சரியான இடத்தில் சேமித்து வைப்பது மிகச் சிறந்த ஒன்று. அதாவது நம் கையில் இருக்கும் சேமிப்பு தொகையானது ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் வருடம்தோறும் பெருகிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எதிர்கால விலைவாசியை சமாளித்து நம்மால் பிற்காலத்தில் வாழ முடியும்.

கடனை வாங்கி சுற்றுலா போவது மிகப்பெரிய தவறு. சுற்றுலா போவதை தவறு என்று கூறவில்லை. நீங்கள் சம்பாதித்து, சேமித்து வைத்த பணத்தில் சுற்றுலா செல்லுங்கள். கடன் வாங்கி தயவுசெய்து சுற்றுலாவிற்கு செலவு செய்யாதீர்கள். நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் உங்களது வியர்வைத் துளி. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறீர்கள்.

அனாவசியமாக அதை செலவு செய்யும்போது உங்களுக்கு அதனுடைய அருமை பெருமைகள் தெரியாது. செலவுக்கு காசு இல்லாமல் கஷ்டப்படும் போது தான், சேமித்த பணத்தின் அருமையை நம்மால் உணர முடியும். இதை நாம் எத்தனைபேர் செய்கின்றோம்? சிந்தித்துப்பாருங்கள். பிற்காலத்தில் யாரும் ஏழையாக கூடாது அல்லவா!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.