யாழ்ப்பாணத்தில் இன்னும் கொரோனா தொற்றாளர்கள் சுதந்திரமாக நடமாட்டம்? – ஊரடங்கு நீடிக்கப்படுவதற்கு இதுவும் காரணம் எனத் தெரிவிப்பு

கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீக்கத்தின்போது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும், கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நடமாடித் திரிகின்றார்கள் என்பதுமே, ஊரடங்கை நீடிக்கக் காரணம் என்று அரச உயர்மட்டங்களிலிருந்து அறியமுடிகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் எனவும், மீண்டும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் எனவும் நேற்றுக் காலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. இந்த அறிவித்தல் வெளியாகி சுமார் அரை மணி நேரத்துக்குள், குடாநாட்டில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுவதான அறிவிப்பு வெளியானது. அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, ‘கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்வு கூறப்படுகின்றது. பொதுமக்கள் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும்’ என்று தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோது பொதுமக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பாதுகாப்புத் தரப்பினர் அரச உயர்மட்டங்களுக்கு அறிவித்திருந்தனர். அதனைவிடக் கொரேனா தொற்றுக்குரிய மதபோதகர் கடந்த 15ஆம் திகதியே ஆராதனை நடத்தியிருந்ததும், அதன் பின்னர் தாவடியில் கொரோனோ தொற்றுக்குரியவர் இனம் காணப்பட்டதும் இடம்பெற்றிருந்தது. ஆகக் குறைந்தது 14 நாட்களுக்குள் அவர்களிலிருந்து வேறு எவருக்கும் பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் மருத்துவத்துறையினரிடம் எழுந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல், கொரோனா காவிகள் இருக்கக்கூடும் என்ற அச்சம் மருத்துவத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் ஊடரங்கைத் தளர்த்துவதானது, கொரோனா வேகமாகப் பரவுவதற்கு வழிகோலும் என்பதால் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட வேண்டும் என்று மருத்துவத்துறையினர் கோரியிருந்தனர். இதனாலேயே ஊரடங்கு நீடிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.