உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை – ஜஸ்டின் ட்ரூடோ
கொரோன வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவையென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் ஜீ-20 நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில் பேசிய அவர், இதற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு அனைவரும் உறுதியுடன் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
கனேடியர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் கனேடிய அரசு எடுக்கும் என்றும் கனடாவிற்கு திரும்பிவரும் பயணிகளில் பலர் நாடு திரும்பியதும் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளாதிருக்கும் நிலையில், அதற்கேற்ற மேலும் கடுமையான நடடிக்கைகளைக் கனேடிய அரசு எடுக்கவுள்ளது என கூறினார்.
கனடா திரும்பும் அனைத்துப் பயணிகளும் 14 நாட்களுக்கு மருத்துவ தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டியது கட்டாயமென நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கட்டாய மருத்துவ தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்குக் கடுமையான அபராதங்களும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.
உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி உயிர்ப்பலி வாங்கி வருகிறது கொரோனா வைரஸ். கனடாவின் கொரோனா வைரஸிற்கு எதிரான அவசர நடவடிக்கைத் திட்டத்திற்கு அரச ஒப்புதல் வழங்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நடவடிக்கை திட்டத்தின் கீழ், கனேடியர்களுக்குத் தேவைப்படும் பின்வருகின்ற உதவிகள் உடனடியான கிடைக்கும்.
- கனடாவில் வசிக்கும் குறைந்தது 15 வயதை உடைய பணியாளர்களுக்கு, அவர்கள் பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்தால் கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு கிடைக்கும்
- வேலைவாய்ப்பு, சுய தொழில், வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவு, கர்ப்பகால கொடுப்பனவு, மகப்பேற்றுக் கால கொடுப்பனவு ஆகியவற்றில் ஒன்றின் மூலமோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை மூலமோ, அல்லது கியூபெக்கில் பெற்றோர் காப்புறுதித் திட்டத்திற்கு அமைவான இதைப் போன்ற கொடுப்பனவுகள் மூலமாகவோ, அல்லது அனைத்தையும் சேர்த்தோ 2019 ஆம் ஆண்டில் மொத்தமாக ஆகக் குறைந்தது 5,000 டொலரை வருமானமாகப் பெற்றிருக்கவேண்டும்.
- நான்கு வார காலப் பகுதியில் தொடர்ந்து 14 நாட்கள் கோவிட்-19 காரணமாக வேலைவாய்ப்பு மூலமோ, சுய தொழில் மூலமோ வருமானம் இன்றி இருக்கவேண்டும். தற்காலிகமாக வேலைசெய்வதை நிறுத்தியோர், வேலை இழந்தோர், நோயுற்றோர், கட்டாய மருத்துவ தனிமைப்படுத்தலில் இருப்போர், பிள்ளையையோ, குடும்ப உறுப்பினரையோ பராமரிப்போர் ஆகியோர் இதில் அடங்குவார்கள்.
- இந்த புதிய திட்டத்தின் கீழ், சுகவீன வேலைக்காப்புறுதி , வழமையான வேலைக்காப்புறுதி , அவசர பராமரிப்பு உதவி, அவசர ஆதரவுக் கொடுப்பனவு ஆகியன கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டோருக்கு, கனேடிய அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு என்ற ஒரே கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளன.
- வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவுக்குத் தகுதி பெறுவோரும், வேலைக்காப்புறுதிக் கொடுப்பனவுக்குத் தகுதி பெறாதவர்களும் புதிய கொடுப்பனவைப் பெறக் கூடியதாக இருக்கும். புதிய திட்டத்தில் வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை பணம் வழங்கப்படும். இந்தக் கொடுப்பனவு 16 வாரங்கள் வரை வழங்கப்படும்.
- இந்தக் கொடுப்பனவு 2020 மார்ச் 15 இல் இருந்து 2020 ஒக்ரோபர் 3 வரையான காலப்பகுதியில் வழங்கப்படும்.
- கனடா வருமானவரி முகவரகத்தின் My CRA கணக்கின் ஊடாக இந்தக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்.
கருத்துக்களேதுமில்லை