எம்.பிக்களுக்குச் சம்பளம் வேண்டாம்; நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்! – கோட்டாவிடம் மனோ வலியுறுத்து

தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து நாடாளுமன்றத்தை ஜனாதிபதி உடனடியாக மீளக்கூட்ட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தனது சமூக ஊடகத் தளங்களில் கருத்துக் கூறியுள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“நாட்டில் நாளுக்கு நாள், பரிசோதிக்க பரிசோதிக்க, புதிது புதிதாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் ஆராயவும், ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் நிவாரணங்கள், பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் கிடைக்காததால், நெருக்கடியாகியுள்ள திக்கற்ற மக்களின் வாழ்வாதாரம் பற்றி ஆராயவும், நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டினால், கொரோனாவுக்கு அப்பால் ஏனைய நோய்களாலும் மக்கள் உயிரிழக்க கூடிய அபாயம் பற்றி ஆராயவும், ஜூன் 2ஆம் திகதிக்கு முன் பொதுத்தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகின்ற அரசமைப்பு நெருக்கடி தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தைப் பெறுங்கள் என ஜனாதிபதிக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறி விட்டதை ஆராயவும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக நாடாளுமன்றத்தைக் மீளக்கூட்ட வேண்டும்.

அமைச்சர் விமல் வீரவன்ச இன்னமும் சிறுபிள்ளைதனமாகப் பேசுகின்றார். நாடாளுமன்றம் கூட்டப்படக்கூடாது என்பதற்கு அவர் சொல்லும் ஒரு காரணம், “எம்.பிக்களுக்கு சம்பளம் வழங்க வேண்டி வருமாம்.

எம்.பிக்களுக்கு சம்பளம் தேவையில்லை என நான் சொல்கின்றேன். அதை எதிரணியின் அனைத்து எம்.பிக்களும் ஏற்பார்கள் என நான் நம்புகின்றேன். உண்மையில் இது ஒரு பிரச்சினை இல்லை. இதையெல்லாம் ஒரு பிரச்சினையாகக் கூறும் விமல் போன்றர்களின் சிந்தனைதான் பிரச்சினை.  இவரது மூளையை ஐஸ் பெட்டியில் வைத்து இந்தத் தேசம் பாதுகாக்க வேண்டும்.

அரச பக்கத்தை சார்ந்த இன்னொரு முன்னாள் எம்.பியான உதய கம்மன்பில இன்னொரு  காரணம் கண்டுபிடித்துச் சொல்கின்றார். அதாவது, “நாடாளுமன்ற சபையில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்தக் கூடாது. அது சமூக இடைவெளி விதியை மீறும்” என்கிறார். இவரது மூளையையும் ஐஸ் பெட்டியில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும்.

அருகருகாக அமராமல், எம்.பிக்கள் வீடுகளில் இருந்தபடி, தொலைத்தொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படலாம். உலகின் வேறுபல நாடுகளில் இத்தகைய காணொளி அமர்வுகள் இன்று நடத்தப்படுகின்றன. இலங்கையில் அனைத்து மக்களும் இன்று வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள். எனவே, இந்தக் காணொளி நாடாளுமன்ற அமர்வை  அனைத்து மக்களும் பார்த்துக் கேட்க முடியும். இதனால், இன்றைய தேசிய நெருக்கடி தொடர்பில் நாட்டில் பொதுஜன அபிப்பிராயம் உருவாகும். அரசியல் பேதங்களுக்கு அப்பால், இதுதான் இன்றைய தேவை” – என்று குறிப்பிட்டுள்ளார்.
………….

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.