இந்த மாதிரியான அழகை கெடுக்கிற பிரச்சனையா அப்படின்னா அது ஆரோக்கிய குறைபாடுதான்!
நோய் வரும் போது உடல் அறிகுறிகளை காண்பிக்கும். சருமத்திலும் இந்த அறிகுறிகள் தென்படும். இதை தான் பலரும் அழகை பராமரிக்க தவறியதால் வந்த விளைவு என்று நினைத்துவிடுகிறார்கள். உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் முறையாக பராமரித்தாலும் அவ்வபோது பல பிரச்சனைகளை சருமத்தில் உண்டாக்கிவிடும். இதற்கு காரணம் பராமரிப்பு போதவில்லை என்பது மட்டும் அல்ல உடல் உள்ளுறுப்புகளுக்கு போதிய சத்துகிடைக்கவில்லை என்பதுதான். அப்படி உண்டாகும் பிரச்சனைகள் என்னவிதமான அறிகுறிகளை காண்பிக்கும், அதற்கு என்ன தீர்வு என்பதை தெரிந்துகொள்ளலாம்.
கூந்தல் பிரச்சனை
கூந்தல் கருகருவென்று அடர்த்தியாக நீளமாக இருக்க வேண்டும். பளபளப்பும் பொலிவும் கிடைக்க வேண்டும் என்று தான் எல்லோரும் கூந்தலை பராமரிக்கிறோம். ஆனால் அதையெல்லாம் தாண்டி கூந்தலில் பொடுகு முதல் வறட்சி வரை பல பிரச்சனைகள் வருகிறது.
அதிகப்படியான கூந்தல் உதிர்வு உண்டானால் அதற்கு தேவை பராமரிப்பு மட்டும் அல்ல. உடலில் இரும்புச்சத்து குறைந்திருக்கும். உடலில் சுரந்துகொண்டிருக்கும் ஹார்மோன்களில் மாற்றங்கள் உண்டாவதாலும் அப்படி இருக்கலாம். உடலில் ஊட்டச்சத்துகள் குறையும் போது கூந்தல் வறட்சியையும், உதிர்வையும் அதிகம் சந்திக்கும்.
முகப்பருக்கள்
பருக்கள் சருமத்துவாரங்களில் அடைந்திருக்கும் அழுக்குகள் வெளியேறாமல் இருக்கும் போது வெளிப்படுகிறது என்று சொல்கிறோம். அதே நேரம் அவை உரிய பராமரிப்பு செய்தும் குறையவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையாக இருக்கலாம்.
மாதவிடாய் கோளாறுகள், மலச்சிக்கல், மன அழுத்தம் போன்றவற்றால் கூட பருக்கள் அதிகமாக வாய்ப்புண்டு. அதனால் பராமரிப்புடன் வேறு ஏதேனும் உடலில் ஆரோக்கிய குறைபாட்டுக்கான அறிகுறி தென்படுகிறதா என்பதையும் கவனியுங்கள்.
சரும சுருக்கம்
வயதான பிறகு சுருக்கங்கள் உண்டாகவே செய்யும். ஆனால் இளவயதில் முகத்தில் சுருக்கங்கள் இருந்தால் சருமத்தில் இருக்கும் கொலாஜன் எலாஸ்டின் தளர்ந்து தசைகளை விரிவடைய செய்வதால் உண்டாகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அதிக எடை இருக்கும் போது வேகமாக உடல் எடை குறைவதும், உடலில் வைட்டமின் சி சத்து குறைபாடு கொண்டவர்களுக்கும் சருமத்தில் சுருக்கம் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் போது பற்றாக்குறைக்கான சத்து குறைபாட்டையும் நிவர்த்தி செய்யுங்கள்.
கருவளையம்
கண்களுக்கு கீழ் இருக்கும் பகுதி கண்ணை சுற்றிலும் வரக்கூடிய கருவளையத்துக்கு காரணம் நிச்சயம் ஆரோக்கிய குறைபாடுதான். கண்களுக்கு அதிகப்படியான வேலை இருக்கும் போது அதாவது இருட்டில் அதிக வெளிச்சத்தை பார்க்கும் போது,உறக்கம் இல்லாத போது, டென்ஷன் அதிகமாக இருக்கும் போது, ஊட்டச்ச்சத்து குறைபாடு இருக்கும் போது அவை கண்களின் கீழ் கருவளைய அறிகுறியை உண்டாக்கும்.
உடலில் நீர் வறட்சி குறையும் போது கருவளையத்தோடு கண்களின் கீழ் வீக்கமும் வரக்கூடும். கருவளையம் வரும்போது ஆரோக்கியத்தையும் சேர்த்து கடைபிடித்தால் தான் நிரந்தரமாக கருவளையத்தை விரட்ட முடியும்.
முகத்தில் தேவையற்ற முடி
இளம்பெண்கள் அதிகம் அவதிப்படும் விஷயம் இது. சருமப்பராமரிப்புக்கும் இந்த தேவையற்ற முடிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இவை மாதவிடாய் குறைபாடு அறிகுறி தான். பெண்கள் பருவமடைந்த பிறகு உடலில் சுரக்கும் ஆண்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கும் போது முகத்தில் உதட்டுக்கு மேல், கன்னங்கள். தாடை கீழ் போன்ற இடங்களில் முடிகளை உண்டாக்கும்.
பலரும் முடி வளராமல் இருக்க மஞ்சள் தூள் முதல் வேக்ஸிங் வரை செய்வார்கள். ஆனால் இவை உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அதை சரிசெய்த பிறகுதான் முடிகளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியும்.
நகங்கள் பராமரிப்பு
இன்று பலருக்கும் கைவிரல்களிலிருக்கும் நகங்களையும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது. ஆனால் நகங்கள் வளர்க்க ஆரம்பித்தாலும் கூட சிலருக்கு அவை பாதியில் உடைந்துவிடும்.இதற்கு காரணம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, இரும்புச்சத்து, புரதச்சத்து குறைபாடாகவும் இருக்கலாம். அதனால் தான் சிலருக்கு நகங்களில் வளர்ச்சியே மிக குறைவாகவும் இருக்கும். புரதம், இரும்புச்சத்து பற்றாக்குறையாலும் உங்கள் நகத்தின் அழகு கெடலாம் என்பதையும் மறக்க வேண்டாம்
பாதங்கள்
உடலை தாங்கி நிற்பது பாதங்கள் தான். கால் பாதங்களில் உண்டாகும் குதிகால் வலி வெடிப்பை அலட்சியப்படுத்தினால் அவை வெடிப்பை அதிகரித்து புண்களையும் தோல் உரிதலையும் உண்டாக்கிவிடுகின்றன. குறிப்பாக நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு பாதத்தில் அதிகளவு தொல்லை வரக்கூடும். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம். பித்தம், கபம் மூன்றில் பித்தம் அதிகம் இருந்தாலும் கூட பாதத்தில் வெடிப்பு வரக்கூடும்.
அழகு பராமரிப்பு குறிப்பு என்று உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறிப்புகள் என்று தனிக்கட்டுரையாக கொடுக்கிறோம். ஆனால் இவை அழகு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதும் கூட என்பதை புரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அழகும் ஆரோக்கியமாக இருக்கும்.
கருத்துக்களேதுமில்லை