மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது அமெரிக்கா!
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில் வெளிநாடுகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
கொரோனா அங்கு கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில் உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதுடன் மரணித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில், அங்கு மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தேவைப்படும் செயற்கை சுவாசக்கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களில் கொரோனா சிகிச்சைக்குத் தேவைப்படும் அனைத்து உபகரணங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தடையால் உள்நாட்டில் மருத்துவ உபகரணங்கள், முகமூடிகளின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வைரஸ் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இதுவரை 4 இலட்சத்து 68 ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 16 ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை