தேர்தல் விடயத்தில் நாம் தலையிடவே மாட்டோம்! – முடிவெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது என்கிறார் பிரதமர் மஹிந்த…
முடிவெடுக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கே
இருக்கின்றது என்கிறார் பிரதமர் மஹிந்த
“நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே இருக்கின்றது. எனவே, இந்த விவகாரத்தில் நாம் தலையிடவே மாட்டோம். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு எமக்கு எவரும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது.”
– இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இம்மாதம் 25ஆம் திகதி நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேர்தலுக்கான புதிய திகதியைத் தீர்மானிக்கும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே உள்ளது.
இதனை ஜனாதிபதியின் செயலர் எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவித்துள்ளார்.
அவர் தலைமையிலான ஆணைக்குழுதான் தேர்தலுக்கான புதிய திகதியை விரைந்து தீர்மானிக்க வேண்டும். இந்த விடயத்தில் நாம் தலையிடவே முடியாது.
கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது.
கொரோனாவின் தாக்கத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் குளிர்காய முனைகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை