கல்முனையில் மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை…
கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்கான நிர்ணய விலை தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (15) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இவ்விடயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் பிரகாரம் ஒரு கிலோ தனி மாட்டிறைச்சி 900 ரூபா, முள்ளுடன் 800 ரூபா, ஈரல் 1000 ரூபா, குடல் 500 ரூபா மனிக்குடல் 300 ரூபா, ஒரு மூளை 250 ரூபா எனும் அடிப்படையில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த விலைகளை விட அதிகரித்து விற்பனை செய்யும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
நாளை வியாழக்கிழமை (16) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேளையில், இறைச்சிக் கடைகளில் இவ்விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், நுகர்வோர் அதிகார சபை உத்தியோகத்தர்களான ஏ.எச்.எச்.எம்.நபார், இசட்.எம்.சாஜித், கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் உட்பட வர்த்தகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை