பல்வேறு பகுதிகளிலும் சிக்குண்டுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை – கி.துரைராசசிங்கம்!

பல்வேறு காரணங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு இலங்கையின் வேறு பாகங்களுக்கும், இந்தியாவின் தமிழ் நாட்டுக்கும் சென்ற பலர் திரும்பி வர முடியாமல் சிக்குண்டுள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பல்வேறு காரணங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு இலங்கையின் வேறு பாகங்களுக்கும், இந்தியாவின் தமிழ் நாட்டுக்கும் சென்ற பலர் திரும்பி வர முடியாமல் மறிபட்டுப் போயுள்ளனர்.

இலங்கையிலும், இந்தியாவிலும் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டங்களும், கொரோனா தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுமே இதற்குக் காரணமாகும்.

இவ்வகையில், இவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவது தொடர்பில் எமது தரவுகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ம.ஆ.சுமந்திரன் ஆகியோர் இறுதியாக நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகப் பதிலளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இருந்து தொடர்பு கொண்டவர்கள் தற்போது தங்கி நிற்கும் இடத்திற்கு அண்மையாகவுள்ள பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதேபோல் யாழ்ப்பாணம் அத்தியடி மற்றும் சுண்டிக்குழி ஆகிய இடங்களில் மறிபட்டுப் போயுள்ளவர்கள் அவர்கள் நிற்கும் பிரதேசங்களுக்குரிய பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதோடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜாவும் இவர்களின் நலன்கள் தொடர்பாக அக்கறை எடுத்துள்ளார்.

மட்டக்களப்பின் முன்னாள் அரச அதிபர் மா.உதயகுமாரும் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பிரதேசங்களுக்குக் கடற்தொழிலுக்குகாகச் சென்ற களுவன்கேணியைச் சேர்ந்த 110 பேருக்கும் மேற்குறித்தவாறு பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதற்கான தெளிவுறுத்தல் வழங்கப்பட்டதோடு அவர்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாடும் என்னால் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழ்நாட்டின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ளச் சென்ற மாணவர்கள் இலங்கை திரும்ப முடியாத நிலையில் சிதம்பரத்தில் மறிபட்டுப் போயுள்ளனர்.

இதேவேளை சமயவழிபாடு தொடர்பில் அரக்கோணம், இரும்புலியூர், பெந்தகொஸ்தே சபைக்குச் சென்றவர்களும் வரமுடியாத நிலையில் உள்ளார்கள்.

மேற்குறித்தவர்கள் தொடர்பில் என்னால் சென்னையிலுள்ள இந்தியா இலங்கைக்கான உதவித் தூதுவர் வி.கிருஸ்ணமூர்த்தியினை தொடர்பு கொண்டு அவர்களுடைய நிலைமை பற்றி விபரித்த போது அவர் தனது மின்னஞ்சல் முகவரியை வழங்கி சம்மந்தப்பட்டவர்களைத் தம்முடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டிருந்தார். இந்த விடயம் மேற்குறித்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் அத் தொடர்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

உதவித் தூதரக உயர்ஸ்தானிகர் அவர்களது கருத்தின் பிரகாரம் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், இந்திய இலங்கை அரசுகளின் தொடர்பாடல் மற்றும் சுகாதாரப் பகுதியினரின் ஆலோசனைகளின் அடிப்படையில் இவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதே நேரத்தில் இவ்விதம் தொழில் நிமித்தம் வெளி மாவட்டங்களுக்குச் சென்று மறிபட்டுப் போனவர்களின் குடும்பங்களினுடைய உதவி நிவாரணம் தொடர்பில் எமது மாவட்டப் பிரமுகர்கள் பலரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.