மட்டக்களப்பு விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு, தாண்டவன்வெளிச் சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார்.
தாண்டவன்வெளிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியைச் சேர்ந்த எஸ்.மதுசன் (வயது-25) என்பவர் கவலைக்கிடமான முறையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனன்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்த தினமான அன்று ஊரடங்கின் காரணமாக பூட்டிவைத்திருந்த மதுபானசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் மதுபானங்களைக் கொள்வனவு செய்வதில் பலர் ஆர்வம் காட்டினர்.
இதனால் மோட்டார் சைக்கிள் போக்குவரத்துக்கள் அதிகமான நிலையில் தனது வேலைத் தளத்திலிருந்து மதிய உணவுக்காக வீடு சென்றபோது மதுபான போத்தல்கள் வாங்கிய இன்னுமொரு இளைஞன் மோட்டார் சைக்கிளுடன் இவர் மீது மோதியபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் தாண்டவன்வெளிச் சந்தியில் இருந்த சமிக்ஞை விளக்குகளும் எரியாத நிலையிலேயே காணப்பட்டிருந்தன.
இந்தவிபத்து தொடர்பாக மதுபான போத்தல்களை கொண்டுசென்ற நிலையில், விபத்தினை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுபவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை