ஷேவிங் செய்தாலே சருமம் எரியுதா? இதை ஃபாலோ பண்ணுங்க-ஆண்கள் பக்கம்!
பெண்களுக்கு மட்டும் அழகு சார்ந்த பிரச்சனைகள் உண்டாவதில்லை. ஆண்களுக்கும் உண்டாகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஒருநாளாவது ஷேவிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு உண்டு. சிலர் தாடியை மாடர்னாக பராமரித்தாலும் கூட அதை ட்ரிம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு முகத்தில் தாடி இருப்பதற்கான வடுவே இருக்ககூடாது என்று தினமும் ஷேவிங் செய்வார்கள். இதனால் சருமத்தின் மென்மை குறைய தொடங்கும். இதில் வறண்ட சருமமாக இருந்தால் மேலும் எரிச்சலையும். வறட்சியையும் உண்டாக்கும். அதிலும் இப்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. சருமத்தில் ரேஸர் படும்போதெல்லாம் எரிச்சலும் கூடவே செய்யும். எப்படி எரிச்சலே இல்லாமல் சருமத்தை வழவழவென்று மென்மையாக வைத்திருப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஷேவ் செய்வதற்கு முன்பு
காலையில் எழுந்ததும் ஷேவ் செய்ய வேண்டாம். மிதமான நீரில் குளித்த பிறகு ஷேவ் செய்வதை கடைபிடியுங்கள். சருமம் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் போது ஷேவ் செய்தால் மேலும் வறட்சியாக இருக்கும். இவை எரிச்சலையும் உண்டாக்கும். குளித்த பிறகு ஷேவ் செய்தால் சருமம் மிருதுவாக இருக்கும்.
வாரத்துக்கு ஒருமுறை ஷேவ் செய்பவர்கள் சற்று மெனக்கெட வேண்டும். ஷேவ் செய்வதற்கு முன்பு முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க முயற்சிக்க வேண்டும். முடியோடு இருக்கும் போது ஸ்க்ரப் செய்வதால் எரிச்சல் போன்ற உபாதைகள் இருக்காது. இறந்த செல்கள் வெளியேறினாலே சருமத்தில் மென்மை கூடும்.
சோப்பு வேண்டாம்
பலரும் செய்யும் தவறு ஷேவ் செய்வதற்கு குளிக்க பயன்படுத்தும் சோப்பு பயன்படுத்துவதுதான். ஷேவிங் செய்வதற்கு பிரத்யேகமாக கடைகளில் கிடைக்கும் லோஷன்களை தான் பயன்படுத்த வேண்டும். சோப்பு பயன்படுத்தும் போது அவை சருமத்தை வறட்சியடையவே செய்யும். இயன்றவரை அதற்கென இருக்கும் லோஷன் பயன்படுத்துவதான் சிறந்தது. குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் க்ரீம்களையோ, லோஷனையோ பயன்படுத்த வேண்டாம். ஆண்களின் முடிகளுக்கேற்ப பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும் பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஷேவ் செய்யும் போது
ஷேவ் செய்வதற்கு முன்பு க்ரீமை கையில் எடுத்து தாடையில் வேகமாக தேய்க்க வேண்டாம். முடிகளை மென்மையாக்க தான் க்ரீம் பயன்படுத்துகிறோம் என்பதை மனதில் கொள்ளுங்கள். இவை பொறுமையான ரேசர் பயன்பாட்டுக்கு பிறகு எரிச்சலை உண்டாக்கும். முடி கீழ் நோக்கி வளர்ந்தால் மேல் நோக்கி ஷேவ் செய்தால் முடி வேர் வரை நீங்கும். அதோடு மென்மையும் வழவழப்பும் கிடைக்கும்.
ஷேவ் செய்த பிறகு முகத்தை மிதமான நீரில் கழுவுங்கள். இதனால் திறந்திருக்கும் சருமத்துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். பிறகு ஐஸ்கட்டியை மெல்லிய துணியில் சுற்றி இலேசாக ஒத்தடம் கொடுத்தால் சருமத்துளைகள் மூடிகொள்ளும். பிறகு மாய்சுரைசர் (ஆண்களுக்கானது) கொண்டு இலேசாக மசாஜ் செய்து கொள்ளலாம். இவை சருமத்தை மிருதுவாக வைத்திருக்கும். அவ்வபோது ரேசரை மாற்றிவிடுங்கள்.
கற்றாழை
கற்றாழை எரிச்சல் தரும் சருமத்துக்கு இதமான பொருள். இதை பயன்படுத்துவதும் எளிதாக இருக்கும். ஷேவிங் செய்து முடித்ததும் கற்றாழை ஜெல்லுடன் பன்னீர் கலந்து குழைத்து விடுங்கள். சுத்தமான காட்டனில் அதை நனைத்து ஷேவிங் செய்த பகுதியில் ஒற்றி எடுங்கள். எரிச்சல் இல்லை என்றால் மிதமாக மசாஜ் செய்யுங்கள். ஒவ்வொரு முறை ஷேவிங் செய்த போதும் இதை செய்யுங்கள். 10 முறைக்கு பிறகு அதிசயத்தக்க வகையில் உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்.
கற்றாழை பயன்படுத்தும் போது அதன் மடல்களை வெட்டி நீரில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து பயன்படுத்துங்கள். அதில் இருக்கும் மஞ்சள் நிற திரவம் வெளியேறிவிடும். இல்லையெனில் அவை சருமத்தில் பட்டு எரிச்சலை உண்டாக்கும். அதே போன்று கற்றாழையில் இருக்கும் முட்களையும் நீக்கி விடுங்கள். கோடைக்காலத்தில் நுங்கு கிடைக்குமே. நுங்கு உடலுக்கு மட்டுமல்ல சருமத்துக்கும் இதமானது தான். அதையும் பயன்படுத்துங்கள் கூடுதலாக சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.
எளிமையான குறிப்புகள் தான். ஆனால் இதில் ஒன்றை அலட்சியப்படுத்தினாலும் முகத்தின் அழகை இழந்துவிடுவீர்கள். அழகு பெண்களுக்கு மட்டுமா, ஆண்களுக்கும் உரியதுதானே!
கருத்துக்களேதுமில்லை