உடல் உஷ்ணத்தை தவிர்க்கும் எண்ணெய் குளியலை கொரோனா தொற்றின் போது செய்யலாமா?
எண்ணெய் குளியலின் நன்மைகள் குறித்து பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். எண்ணெய் குளியல் செய்வதால் உடல் மேல்புற தோல் பளபளப்பாக இருக்கும். தோலில் இருக்கும் அழுக்குகள் நீங்கி தோல் சுத்தமாக இருக்கும்.
சருமத்தில் உள்ளே ஊடுருவும் அழுக்கு அங்கேயே தங்கி சருமத்தை பாதிப்புக்குள்ளாக்குவதோடு சரும நோய்களையும் உண்டாக்கும். உடல் மாறிவரும் உஷ்ணத்துக்கேற்ப உறுப்புகளும் பாதிப்புக்குள்ளாகும். உஷ்ணம் அதிகரித்தால் பித்த நிலையும் அதிகரிக்கும். உடல் சூடு தான் உடலில் நோயை உண்டாக்கவும் செய்கிறது.
உடல் உஷ்ணத்தால் உண்டாகும் வயிறு வலியும், கண்வலியும், வைரல் இன்ஃபெக்ஷனை உண்டாக்கும். மாறாக உடல் சருமத்தில் எண்ணெய் பசை இருக்கும் போது உடல் வைட்டமின் டி சத்தை உறிஞ்சுக்கொள்ளும். கோடையில் நீர்க்கடுப்பு உண்டாக காரணம் உடல் உஷ்ணமும் கூட அதனால் உடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டியது அவசியம்.
வாரம் ஒருமுறை தலையில் உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து தேய்த்து நன்றாக கூந்தல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். மாதம் ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உடல் முழுக்க எண்ணெய் மசாஜ் செய்து குளிக்க வேண்டும். மூட்டு வலி இருப்பவர்கள் எண்ணெயை மூட்டுகளில் தடவி மசாஜ் செய்து குளிக்க வேண்டும். கண்டிப்பாக கோடைகாலங்களில் எண்ணெய் குளியல் மேற்கொள்வது அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்.
தற்போது கொரோனா தாக்கம் பெருகிவரும் நிலையில் உடலில் காய்ச்சலே வராமல் பார்த்துகொள்ள வேண்டியதும் அவசியம். அதனால் எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போதும் கூடுதல் கவனம் தேவை.
யார் எல்லாம் எண்ணெய் குளியல் மேற்கொள்ளலாம்.
சிறுவயது முதல் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களது உடல் எண்ணெய் குளியலை எல்லா காலங்களிலும் ஏற்றுகொள்ளும் என்பதால் இவர்கள் இந்த கோடைக்காலங்களிலும் தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் எப்போதும் சீரான வெப்பநிலையில் இருக்கும்.
எண்ணெய் குளியல் வேண்டாம்
எண்ணெய் குளியலின் நன்மைகளை உணர்ந்து வீட்டில் இருப்பதை பயன்படுத்தி எண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டாம். புதிதாக எண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது உடல்நிலை எல்லோருக்கும் ஒரே மாதிரியான மாற்றத்தை உண்டாக்கும். சிலருக்கு குளிர்ச்சியை உடனடியாக உண்டாக்கிவிடும். சிலருக்கு உஷ்ணத்தை அதிகரித்து சூட்டில் அதிக குளிர்ச்சியை உண்டாக்கிவிடும். இன்னும் சிலருக்கு குளிர் காய்ச்சலோடு உடல் முதல் பற்கள் வரை கிட்டிவிடக்கூடும். கொரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் எண்ணெய் குளியலால் காய்ச்சல் வந்தால் மேலும் ஆரோக்கியத்தில் குறைபாட்டை உண்டாக்கும். அதனால் தான் இயன்றவரை புதிதாக எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பவர்கள் தற்போது தவிர்ப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
அல்லது இயன்றவரை பாதுகாப்பாக எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். நல்லெண்ணெயை இலேசாக சூடு செய்து நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் சுக்கு தைலத்தை வாங்கி கலந்து தேய்க்கலாம். உச்சந்தலையில் மட்டும் எண்ணெய் வைத்து சூடு பறக்க தேய்த்து அதிக நேரம் ஊறவிடாமல் 15 நிமிடங்களில் தலைக்கு குளிக்க வேண்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, பத்து நாட்களுக்கு ஒருமுறை, வாரத்துக்கு ஒரு முறை என்று பழக்கப்படுத்துங்கள். இப்படி செய்தால் உங்கள் உடல் மழைக்காலங்களிலும் எண்ணெய் குளியலை பாதிப்பில்லாமல் ஏற்றுகொள்ளும்.
எண்ணெய் குளியலின் போது குளிர்ந்த நீரில் குளிக்காமல் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய் குளியலுக்கு பிறகு வெயிலில் அதிகம் அலைய கூடாது. எண்ணெய் குளியலுக்கு பிறகு குளிர்ச்சியான தயிர், மோர், நீர்ச்சத்துள்ள காய்கறிகள், குளுமை மிகுந்த பழங்கள் உணவு பொருள்களையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும். பகல் பொழுதில் தூங்கவும் கூடாது.
கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவர்கள்
உடல் உஷ்ணத்தை தவிர்க்க எண்ணெய் குளியல் தான் சிறந்தது என்று சொன்னாலும் மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள், ஆரோக்கிய குறைபாட்டை கொண்டிருப்பவர்கள், நோய்க்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள் (குறிப்பாக சத்து குறைபாடு கொண்டிருப்பவர்கள்) போன்றவர்கள் எண்ணெய் குளியலை தவிர்ப்பது தான் பாதுகாப்பானது.
உஷ்ணம் தணிக்கவும் உடலை பாதுகாக்கவும் எண்ணெய் குளியலை மேற்கொள்ள விரும்பினால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு எண்ணெய் குளியலை மேற்கொள்ளுங்கள். தற்போதைய சூழலில் காய்ச்சல் வராமல் பார்த்துகொள்வதுதான் பாதுகாப்பானது.
கருத்துக்களேதுமில்லை