அவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு?
நிலமையை சமாளிக்க இலகுவான வழியிருந்தும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட பயப்படுவது ஏன்?
வெளிநாடுகளில் இருந்து பில்லியன் கணக்கில் பெறப்படும் கொரோனா நிவாரண நிதிக்கு நடப்பது என்ன?
தேர்தல் திகதி பிற்போட்டமை விடயத்தில் அரசியலமைப்பை கவனத்தில் கொள்ளாமல் விட்டதா தேர்தல்கள் ஆணைக்குழு?
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் அரசியலமைப்பு நெருக்கடி ஒன்றை எதிர்கொள்ளப்போகின்றாரா?
நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் இருந்துவந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் இவ்வேளையில் அவசரமாக ஊரடங்கினை நீக்கி இயல்பு நிலையை வலிந்து தோற்றுவித்து இராணுவ முற்றுகைக்குள் மக்களை வைத்து பெயரளவில் ஓர் தேர்தலை நடாத்தி பெரும்பான்மை வெற்றி பெற தற்போதைய அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது. உலகமே கைமீறிச்செல்லும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவது எப்படி என்று சிந்தித்துக்கொண்டிருக்கையில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது எப்படியென சிந்தித்துக்கொண்டிருக்கிறார்.
கொரோனா தொற்றுக்கு அப்பால் இலங்கை தற்போது பல வழிகளிலும் நிதி நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. அரசிடம் போதிய நிதியிருப்பினும் அரசாங்கம் தாபிக்கப்பட்டிருக்காத நிலையில் வெறும் அமைச்சரவையை மாத்திரம் வைத்து அதிகாரத்திற்கு அப்பால் சென்று நிதியினை கையாள அரசதரப்பு முயல்கிறது. நாட்டின் முழுமையான நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடமே உண்டு. இடைக்கால அமைச்சரவையின் மூலம் நிதிகளை விடுவிக்கவோ திட்டங்களை அறிவிக்கவோ முடியாது.
தற்போது கொரோனா நிவாரண நிதியாக பல பில்லியன் ரூபாய்களை அமெரிக்கா, சீனா உற்பட பல நாடுகள் இலங்கைக்கு வழங்கியுள்ளன. இந்த நிதிகளை கையாளும் விடயத்திற்கு பொறுப்பாக ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார் குறித்த நிதியின் பயன்பாடு குறித்து பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறவேண்டிய கடமை ஜனாதிபதிக்கும் உண்டு.
பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரசாங்கம் கொரோனா நிவாரண நிதியாக பெற்றிருப்பினும் ஒரு கிலோ அரிசியைக்கூட மக்களுக்கு இன்னும் நிவாரணமாக வழங்கவில்லை. சமுக்தி ஊடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000/- ரூபா கொடுப்பனவு மாத்திரமே இதுவரையில் கொரோனா நிவாரணமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது இந்த நிதி கொரோனா நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டதா என்ற கேள்வியும் உண்டு.
அத்தோடு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களான #பருப்பு, #ரின்_மீன் ஆகிய பொருட்களுக்கு திடீரென விலை குறைப்பினை அறிவித்தார் ஜனாதிபதி. பருப்பு ஒரு கிலோவின் இறக்குமதி பெறுமதி 130/- ரூபாய்களுக்கும் அதிகமாகும் அதேபோல் ரின் மீன் ஒன்றின் இறக்குமதி பெறுமதியும் 200/- ரூபாவுக்கு அதிகமாகும் திடீரென இவற்றின் விலையை பாதியாக குறைத்ததன் ஊடாக இறக்குமதியாளர்கள் அடையும் நட்டத்தை போக்க அரசு இறக்குமதியாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.
குறித்த பருப்பு ரின் மீன் ஆகிய பொருட்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்கள் யார்? அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள மானியத்தொகை எவ்வளவு? அதற்கான நிதியை எவ்வாறு வழங்கினார்கள்? விலை குறைப்பு அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த பொருட்கள் சாதாரண விலையை விட அதிகரித்த விலையிலேயே வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. இறக்குமதியாளர்கள் அதிகரித்த விலையில் தான் தமக்கு அவற்றை வழங்குவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பருப்பு ரின் மீன் மூலம் பாரிய ஊழலொன்றை புரிந்துள்ளதா இந்த அரசு?
கொரோனாவுக்கென வழங்கப்பட்ட நிவாரண நிதியை என்ன செய்தார்கள்? கொரோனா பரம்பலை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கையென்ற பெயரில் மக்களை வீடுகளுக்கு அடைத்துவைத்து உரிய நிவாரணமும் வழங்காது பட்டினி நிலையை தோற்றுவித்ததோடு இராணுவத்தின் மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எடுத்த நடவடிக்கைகள் மூலம் இன்று இராணுவமே கொரோனா தொற்றுக்கு ஆளாகி நாட்டினை இக்கட்டான நிலமைக்கு கொண்டுசென்றமை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டியதும், தேர்தலொன்றை இலக்குவைத்து அவசரமாக ஊரடங்கினை நீக்கி கொரோனா தொற்றாளர்களை அதிகரித்தமை குறித்தும், இதுவரை மக்களுக்கு அனர்த்த நிவாரணங்கள் வழங்காமை குறித்தும், பாராளுமன்றத்திற்கு பதில் கூறவேண்டும் என்பதாலும் கொரோனா நிதிக்கையாள்கை தொடர்பிலும் விளக்கம் அளிக்கவேண்டும் என்பதாலுமே ஜனாதிபதி பாராளுமன்றதை மீண்டும் கூட்ட வாய்ப்பிருந்தும் அதை செய்ய மறுக்கிறார்.
தற்போது தேர்தல் திகதியாக யூன் 20 ஆம் திகதியை தேர்தல் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த திகதி அறிவிப்பானது அரசியலமைப்பை முழுமையாக விளங்கிக்கொண்டு விடுக்கப்பட்ட அறிவிப்பு அல்ல என்று விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. அமைச்சரவையிலும் தேர்தல் ஆணைக்குழுவிலும் உள்ளோரும், ஜனாதிபதியும் அரசியலமைப்பு குறித்து அசண்டையீனமாக இருக்கின்றனர் என்ற விடயத்தையே சமீபகால நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. இந்த நாட்டில் மீயுயர் தன்மையுடையது அரசியலமைப்பு மாத்திரமே அதனை கேள்விக்குற்படுத்தும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது தண்டனைக்குறிய குற்றமாகும்.
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால் மூன்று மாத காலத்தினுள் தேர்தலொன்றை நடத்தி புதிய பாராளுமன்றம் கூடும் திகதியையும் நிர்ணயித்தே கலைக்கப்படவேண்டும். அதன் பிரகாரம் யூன் 2 ஆம் திகதி கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூட்டப்பட்டாக வேண்டும். பாராளுமன்றம் இல்லாமல் நாட்டினை தொடர்ச்சியாக வைத்திருக்கமுடியாது. எனினும் தற்போது தேர்தல் திகதி யூன் 20 என அறிவிப்பு செய்திருப்பதானது அரசியலமைப்பு நெருக்கடியொன்றை ஏற்படுத்தக்கூடும். ஜனாதிபதி ஏற்கனவே தேர்தல் குறித்து விடுத்த வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்று மீண்டும் ஓர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டால் கலைக்கப்பட்ட பாராளுமன்ற அறிவிப்பும் செல்லுபடியற்றதாக மாறிவிடும். பழைய பாராளுமன்றம் மீண்டும் அதே அந்தஸ்தோடு செயற்படத்தொடங்கும்.
எது எவ்வாறோ மக்களுக்கு போதிய அளவு நிவாரணம் கிடைக்கவும், நிவாரண நிதியில் ஊழல் இடம்பெறாமல் இருக்கவும், கொரோனா தொடர்பான திட்டங்களை அறிவிக்கவும் நாட்டை தொடர்ந்து கொண்டு நடத்தவும் பாராளுமன்றம் கூட்டப்படவேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் நாடாளுமன்றத்தில் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் ஜனாதிபதியும், அமைச்சரவையும் பதில் சொல்வதோடு அரச அதிகாரிகளும் நீதிமன்றம் செல்ல நேரிடலாம்…
நன்றி
சு .பிரபா
27/04/2020
கருத்துக்களேதுமில்லை