வடபகுதி பாடசாலைகளில் இராணுவத்தின் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள்- சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சிவமோகன் தெரிவிப்பு

வடபகுதி பாடசாலைகளை இராணுவத்தின் கொரோனா தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதால் தமிழ் மக்கள் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  வைத்திய கலாநிதி சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்த அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மாகாணம் எவ்வித கொரோனா அச்சுறுத்தல் அற்ற முறையில் இருந்து வந்தது. அப்படி இருந்தும் போதகர் ஒருவரால்தான் யாழ்.மாவட்டம் பாதிப்பிற்கு உள்ளாகியது.

அதிலிருந்து மக்கள் மீண்டுவரும் பொழுது தற்பொழுது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய இராணுவத்தினரை வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கொண்டுவந்து பலவந்தமாக தங்கவைக்க முற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயத்தில் வடமாகாணத்தின் கல்வித் திணைக்களத்தின் ஆலோசனைகளையோ சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனைகளையோ பெறவில்லை என்பது தெரிய வருகிறது.

மேலும், முல்லைத்தீவு பாரதிபுரம் இரணைப்பாலை போன்ற பாடசாலைகளில் இவர்களை தனிமைப்படுத்த உள்ளதாக தெரிய வருகிறது. இலங்கை முழுவதும் பத்தாயிரத்து இருபது பாடசாலைகள் இருக்கின்றன. அந்தந்த பிரதேசங்களில் பெருந்தொகையான பாடசாலைகள் இருக்கும் பொழுது எதற்காக அரசாங்கம் வடக்கில் உள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்கின்றனர் என்பது சந்தேகத்திற்கு இடமாக இருக்கின்றது.

எமது மக்களை கொரோனா நோயில் தள்ளிவிடுவதுதான் இவர்களது நோக்கமா? உரிய முகாம்களுக்கு அருகில் பாடசாலைகள் அமைந்திருக்கின்றன. அந்த பாடசாலைகளை இவர்களது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு எடுத்தால் என்ன?

அதைவிடுத்து எதற்காக வடபகுதியில் உள்ள பாடசாலைகளைத் தெரிவுசெய்ய வேண்டும். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாக இல்லை” என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.