உலக வழக்கத்தில் மாற்றம்: ஐ.சி.சி.யின் முடிவுக்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் எதிர்ப்பு!
களத்தில் வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வையை பயன்படுத்தும் உலக வழக்கத்தை, சர்வதேச கிரிக்கெட் சபை மாற்ற எண்ணி வரும் நிலையில், அதற்கு வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தாக்கம் முடிந்து கிரிக்கெட் போட்டி தொடங்கும் போது களத்தில் வீரர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வையால் (வைரஸ் பரவும் அபாயம்) தேய்ப்பதற்கு பதிலாக செயற்கை பொருளை பயன்படுத்தி தேய்க்க அனுமதி அளிப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை பரிசீலித்து வருகிறது.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவலினை தடுக்க முடியும் என சர்வதேச கிரிக்கெட் சபை நம்புகின்றது.
இந்த நிலையில் இந்த முடிவுக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில், ‘பந்தை எச்சில் அல்லது வியர்வையால் தேய்ப்பது களத்தில் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்று. இதை கட்டுப்படுத்த முடியாது’ என்று கூறியுள்ளார்.
மைக்கேல் ஹோல்டிங் கூறுகையில், ‘வீரர்கள் அனைவரும் மருத்துவ ரீதியாக உரிய பாதுகாப்பான சூழலில் விளையாடுவார்கள் என்கிற போது, வீரர்களின் எச்சில் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பந்தை பளபளப்பாக்க எச்சில் அல்லது வியர்வையை பயன்படுத்துவதன் மூலம் இன் ஸ்சுவீங் மற்றும் அவுட் ஸ்வீங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை